Enable Javscript for better performance
சூறைக்காற்றில் ரூ.35 லட்சம் வாழைகள் சேதம்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சூறைக்காற்றில் ரூ.35 லட்சம் வாழைகள் சேதம்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

    By DIN  |   Published on : 15th October 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி அருகே வெள்ளிக்கிழமை விடிய விடிய பெய்த மழை மற்றும் சூறைக் காற்றால் ரூ.35 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சுத்தமல்லி அருகேயுள்ள பழவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிற்பகலில் வீசிய  சூறைக்காற்றில் ஏராளமான வாழைகள் சேதமாகின. தொடர்ந்து இரவு முழுவதும் பெய்த மழை மற்றும் காற்றுக்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
    சுத்தமல்லி, கோடகநல்லூர், மேலக்கல்லூர், நடுக்கல்லூர், பழவூர், திருப்பணிகரிசல்குளம்,  கொண்டாநகரம், பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான வாழைகள் காற்றில் சேதமாகின. அறுவடைக்குத் தயார் நிலையில இருந்த வாழைகள் சேதமானதால் விவசாயிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
    இதுகுறித்து தகவலறிந்ததும் மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கல்லூர்  இ.வேலாயுதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.
    தகவலறிந்த ஆட்சியர் மு.கருணாகரன், வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் வயல்களுக்குச் சென்று சேதமடைந்த வாழைகள் குறித்து கணக்கெடுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சுத்தமல்லி சுற்றுவட்டாரத்தில் கடந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல்பயிரில் குருத்துப் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு பல விவசாயிகளுக்கு போதிய மகசூல் கிடைக்கவில்லை. நெல் மணிகள் சாவிகளாக மாறியதால் பெரும் இழப்பைச் சந்தித்தோம். நோய் தாக்கிய பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று முறையிட்ட பின்பு அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க ஒப்புதலுக்கு அனுப்பியதாகக் கூறினர். ஆனால், பல விவசாயிகளுக்கு உதவி கிடைக்கவில்லை.
    அதனால் நிகழாண்டில் பலரும் கடன் பெற்று வாழை பயிரிட்டனர். ஏத்தன், கதளி, ரசகதளி, நாட்டு வாழை, ரோபஸ்டா, கற்பூரவல்லி ரகங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இன்னும் சில நாள்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றால் சேதமடைந்துள்ளன. ரூ.35 லட்சத்துக்கும் அதிகமான வாழைகள் சேதமாகியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இழப்பைச் சந்திக்கும் விவசாயிகளுக்கு அரசு உதவாவிட்டால், விவசாயத்தைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆகவே, சேதங்களை முறையாகக் கணக்கிட்டு காலதாமதம் செய்யாமல் உடனடியாக உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai