Enable Javscript for better performance
நெல்லையில் புத்துயிர் பெறுமா மழைநீர் சேகரிப்புத் திட்டம்?- Dinamani

சுடச்சுட

  

  நெல்லையில் புத்துயிர் பெறுமா மழைநீர் சேகரிப்புத் திட்டம்?

  By DIN  |   Published on : 15th October 2016 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் நிகழாண்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், மாநகரப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்துக்கு புத்துயிர் ஊட்ட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  தமிழகத்தில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, குடிநீர் மற்றும் தண்ணீர் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் பயன்பாடு கடந்த 25 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. திருநெல்வேலி, விருதுநகர் உள்பட 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாக, தமிழக நீர்வள ஆதார அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரை புறநகர் பகுதிகளில் மாதந்தோறும் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஒவ்வொரு 4 வீடுகள் அதிகரிக்கும்போதும் புதிதாக 5 ஆழ்துளைக் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் உறிஞ்சப்படுகிறது. கட்டுமானம் முதல் பல்வேறு அடிப்படைத் தேவைகள், குடிநீர் என அனைத்துக்கும் மாநகராட்சியின் புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீரே பயன்பாட்டில் உள்ளது.
  நிலத்தடி நீர்மட்டத்தைப் பேணிக் காக்கவும், மழைநீரைச் சேமிக்கவும் 2001 ஆம் ஆண்டில் கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அப்போதைய அ.தி.மு.க. அரசு அமல்படுத்தியது. அனைத்து குடியிருப்புகளின் அருகேயும் குறைந்தபட்சம் 3 அடி ஆழம், 5 அடி அகலத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  புதிய கட்டடங்களுக்கு அனுமதி பெறும்போது மழைநீர் சேகரிப்புத் திட்டத்துக்கு இடம் ஒதுக்கியிருப்பது வரைபடத்தில் இருந்தால் மட்டுமே கட்டடம் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. இதுதவிர அனைத்துப் பகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உள்ளாட்சித் துறையினர் கண்காணித்து அரசுக்கு அறிக்கையை அனுப்பி வைத்தனர். அரசின் இந்த முயற்சியால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.
  பராமரிப்பில்லா தொட்டிகள்: மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீதான கெடுபிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்ததால், பல இடங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்ட தொட்டிகள்கூட பராமரிக்கப்படாமல், வழக்கம்போல வீட்டின் கூரைகளில் விழும் மழை நீர் கழிவுநீர் ஓடைகள் வழியாக வீணாகிச் செல்ல மக்கள் வழிசெய்துவிட்டார்கள். அரசு அலுவலகக் கட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளும் இப்போது தூர்ந்து போய் உள்ளன.
  அ.தி.மு.க. தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்ற பின்பு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட்டிருந்தாலும், 2001 ஆம் ஆண்டில் இருந்தது போன்ற கடுமையான கண்காணிப்போ, உள்ளாட்சித் துறை மூலம் மக்களுக்கு கெடுபிடிகளோ அளிக்கப்படாமல் உள்ளது. அதேநேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் நூற்றுக்கணக்கான ஆழ்துளைக் குழாய்கள் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீரின் தேவை அதிகரித்து சேமிப்பு குறைந்தவண்ணம் உள்ளது. ஆகவே, மழைநீர் சேகரிப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசர அவசியமாகியுள்ளது.
  வறட்சி அதிகம்: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கோடையை விஞ்சும் அளவுக்கு வெப்பம் காணப்பட்டது. அக்டோபர் முதல் இரு வாரங்களில் தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.
  இதனால் மாநகரின் புறநகர் பகுதிகளான ஆசிரியர் குடியிருப்பு, கே.டி.சி.நகர், ரோஸ் நகர், பிடி காலனி, பேட்டை புறநகர் பகுதிகள், பால்கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆழ்துளை கிணறுகளில் நீர்வரத்து மிகவும் குறைந்தது. மகாராஜ நகர், தியாகராஜ நகர் பகுதிகளிலும் பல வீடுகளில் அடிப்படை தேவைகளுக்காக பணம் கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
  இந்த நிலையில் வியாழக்கிழமை பெய்த மழையால் பூமி குளிர்ந்துள்ளது. நகரில் வெப்பம் தணிந்து ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கியுள்ளது. இச் சூழலில் தமிழக அரசின் சிறந்த திட்டங்களில் ஒன்றான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை கடுமையாகச் செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். மழைநீர் சேகரிப்புத் திட்ட தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உள்ளாட்சித் துறைகள் மூலம் உடனடியாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai