சுடச்சுட

    

    தீபாவளி: நெல்லை மாவட்டத்தில் 44 இடங்களில் தீ விபத்து: 1500 வைக்கோல் கட்டுகள் எரிந்தன

    By DIN  |   Published on : 31st October 2016 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததில் 44 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. 1500-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள், 4 குடிசை வீடுகள் எரிந்தன.
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் மேலப்பாளையம் கொட்டிகுளம் பகுதியில் உள்ள பரமசிவன் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போரில் தீ விபத்து ஏற்பட்டது.
    பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் 3 வாகனங்கள் சென்று தீயணை அணைத்தனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 200-க்கும் மேற்பட்ட குடங்களில் தண்ணீர் வழங்கி தீயணைப்பு படையினருக்கு ஒத்துழைத்தனர். 1200 கட்டுகள் இருந்ததால் எட்டரை மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது.
    திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தில் பிள்ளையார் கோயில் தெருவில் சுப்பிரமணியன் என்பவரது குடிசை வீட்டில் தீப்பற்றி எரிந்தது. மாற்றுத் திறனாளியான சுப்பிரமணியனை அப்பகுதி பொதுமக்கள் குடிசையில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தனர். இந்த விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
    திருநெல்வேலி நகரம் ராமையன்பட்டி தைக்கா தெருவை சேர்ந்தவர் பாதுஷா (38). அப்பகுதியில் இவர் நடத்தி வந்த டீக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த காஸ் சிலிண்டர், குளிர்சாதனப் பெட்டி, பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
    பேட்டை சாஸ்திரிநகரில் காரல்மார்க்ஸ் என்பவர் வீட்டு முன் அமைந்திருந்த ஓலை ஷெட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு நிறுத்தியிருந்த சுமை ஆட்டோ, கார் ஆகியவற்றின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
    பேட்டை சரோஜினி தெருவில் வீட்டு மாடியில் அமைந்திருந்த ஓலைப் பந்தல், கோபாலசமுத்திரம் பிரதான சாலை வ.உ.சி. நகரில் வீட்டின் முன்பக்க ஓலைப் பந்தல் மற்றும் திருப்பணிசெட்டிக்குளம், பூலாங்குடியிருப்பு ஆகிய இடங்களில் வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமடைந்தன.
    பாளையங்கோட்டை கே.டி.சி. நகர், ராஜாகுடியிருப்பு மற்றும் பேட்டை, சுத்தமல்லி, கீழக்கல்லூர், தென்பத்து, கரிசூழ்ந்தமங்கலம், சங்கன்திரடு உள்பட இம்மாவட்டத்தில் 44 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசை வீடுகள், 1500-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்த சேதமடைந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    600 பேர் மீது வழக்கு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மாநகரப் பகுதியில் 200 பேர், மாவட்டத்தில் 400 பேர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராக்கெட் பட்டாசு வெடித்துஅங்கன்வாடி கட்டடத்தில்ஆவணங்கள் எரிந்து சேதம்
    களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்தபோது, அங்கன்வாடி கட்டடத்தின் கதவு, இருக்கைகள், அங்குள்ள ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.
    களக்காடு ஆற்றங்கரை தெருவில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அருகில் சிலர் ராக்கெட் ரக பட்டாசு வெடித்தனராம். அப்போது, பட்டாசு அங்கன்வாடி மையக் கட்டடத்தில் விழுந்து வெடித்தது. இதில், கட்டடத்தின் கதவு, உள்ளே இருந்த இருக்கைகள் உள்ளிட்ட உபகரணங்கள், ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai