திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் ராமநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மிதமான மழையால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை தொடங்கிய போதிலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நீடிக்காததால் தொடர்ந்து நீர்வரத்து கிடைக்கவில்லை.
புதன்கிழமை காலை நிலவரப்படி குண்டாறு அணையில் 4 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 8 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 286.80 கனஅடி, கடனாநதி அணைக்கு 28 கனஅடி, ராமநதி அணைக்கு 32.90 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 10 கனஅடி நீர்வரத்து இருந்தது.
குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையிலிருந்து 254.75 கனஅடி, கடனாநதி அணையில் இருந்து 8 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. பிற அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 33.20 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 25.98 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 32.64 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 25 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 28.37 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 6.98 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2 அடியாக இருந்தது.
நீர்மட்டம் உயர்வு: கடனாநதி அணையின் நீர்மட்டம் 0.50 அடி உயர்ந்து 46 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 2.75 அடி உயர்ந்து 40 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 39.50 அடியாகவும் இருந்தது.
தாமிரவருணி பாசனத்தில் வழக்கமாக கார் பருவ சாகுபடிக்கு ஜூன் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். 2016 இல் வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால் பிசான சாகுபடியும் பொய்த்தது.
குடிநீர் தேவைக்கு போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில் அணைகளும் வறண்டன. இதனிடையே நிகழாண்டு தென்மேற்கு பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே கார் பருவம் சாகுபடி செய்ய முடியும். ஆகவே, சாகுபடி பணிகளை தொடங்க முடியாத நிலையில், மழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.