ஆவுடையானூரில் மதுக்கடையை நிரந்தரமாக மூடக் கோரி பெண்கள் மதுபாட்டில்களை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில், அரியப்புரம் செல்லும் வழியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 3 தினங்களாக சுற்று வட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த தென்காசி வட்டாட்சியரிடம் மனு அளித்து 3 தினங்களாகியும் கடையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 3ஆவது நாளான புதன்கிழமை போராட்டக் குழுவினர் மது பாட்டில்களை வைத்து ஒப்பாரி வைத்தும், பாடை கட்டி இறுதி ஊர்வலம் நடத்தியும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் பாவூர்சத்திரம் கடையம் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 7ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களக்காட்டில்...
களக்காடு, மே 17: களக்காடு ஜெ.ஜெ. நகரில் டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
களக்காடு ஜெ.ஜெ. நகர் கிராம மக்கள் சார்பாக எஸ். ராஜகுமாரி மாவட்ட ஆட்சியருக்கு புதன்கிழமை அனுப்பிய மனு:
களக்காட்டிலிருந்து நான்குனேரி செல்லும் பிரதான சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே ஜெ.ஜெ. நகர் சாலை சந்திப்பு பகுதியில் களக்காடு பகுதியில் ஏற்கெனவே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. பிரதான சாலையையொட்டி டாஸ்மாக் கடை அமைந்தால் இந்த வழியாக எந்நேரமும் எவ்வித அச்சமுமின்றி சென்று வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவிடும். விபத்துகளும் மேலும் அதிகரித்து விடும் ஆபத்தும் உள்ளது. எனவே, ஜெ.ஜெ. நகர் சாலை சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எவ்விதத்திலும் அனுமதி வழங்கக் கூடாது என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.