திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு பழங்காலப் பொருள்கள் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
அறிவியல் மையத்தின் சார்பில், சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடும் வகையில், மே மாதம் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு பழங்காலப் பொருள்கள் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சிக்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த பொருள்கள், விண்டேஜ் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், கடிகாரங்கள், வால்வு ரேடியோக்கள், தொலைக்காட்சிகள், மிதிவண்டிகள், கிராமபோன்கள் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், தபால் தலைகள், நகை மற்றும் கலை வேலைப்பாடுகள் மிகுந்த பிற பொருள்களை அறிவியல் மையம் கோரியிருந்தது.
இதன்படி, விருப்பமுள்ள பலரும் தங்களுடைய விலைமதிப்பற்ற பொருள்களை கண்காட்சியில் வைத்து அதனுடைய அரிய தகவல்களை பொதுமக்களுக்கு பகிர்ந்துகொள்ளும் வகையிலான கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
இக்கண்காட்சியை, திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வி.பி. சந்திரசேகர் தொடங்கிவைத்தார். சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடுவதன் அவசியம் குறித்து அறிவியல் மைய அதிகாரி கே. நவராம்குமார் விளக்கிக் கூறினார்.
கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன. தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம். இதன் தொடர்ச்சியாக, வரும் திங்கள்கிழமை (மே 22) பிரத்யேகமாக பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இடம்பெறவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை, அறிவியல் மைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு 9442994797, 9788078048 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.