சிரத்தையான பக்தியுடன் இறைவேண்டல் அவசியம்: சிருங்கேரி இளைய பீடாதிபதி

சிரத்தையான பக்தியோடு இறைவனை வேண்டுவது மிகவும் அவசியமானதாகும்; அப்போது நாம் நினைத்தது நிறைவேறும் என்றார்
Published on
Updated on
1 min read

சிரத்தையான பக்தியோடு இறைவனை வேண்டுவது மிகவும் அவசியமானதாகும்; அப்போது நாம் நினைத்தது நிறைவேறும் என்றார் சிருங்கேரி இளைய பீடாதிபதி விதுசேகர பாரதீ சுவாமிகள்.
சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த சுவாமிகள், இளைய பீடாதிபதி விதுசேகர பாரதீ சுவாமிகள் ஆகியோர் திருநெல்வேலியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளனர். தியாகராஜ நகர் சிருங்கேரி சாரதா மண்டபத்தில் புதன்கிழமை காலையில் பக்தர்களுக்கு பீடாதிபதி பாரதீ தீர்த்த சுவாமிகள் ஆசி வழங்கினார். மாலையில் சாரதாம்பாள், சந்திரமவுலீஸ்வரருக்கு சுவாமிகள் பூஜை செய்தார். பிட்சா வந்தனம், பாதுகா பூஜைகள், தீர்த்த பிரசாதம் வழங்குதல், ஆச்சார்யாள் தரிசனம் ஆகியவை நடைபெற்றன. ஈரோடு ராஜாமணி பாகவதரின் பஜனை நடைபெற்றது.
இளைய பீடாதிபதி விதுசேகர பாரதீ சுவாமிகள் புதன்கிழமை மாலையில் கெட்வெல் ஆஞ்சநேயர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், சிவபுரம் சிருங்கேரி சாரதா மண்டபம் விநாயகர், சாரதாம்பாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமிக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்கள் கோலாட்டம் அடித்தும், ஆரத்தி எடுத்தும், விளக்கேற்றியும், பஜனைப் பாடல்கள் பாடியும், வேத கோஷங்கள் எழுப்பியும் வரவேற்றனர். ஆடிட்டர் நடராஜன் என்ற ராஜு, ராமசுவாமி வாத்யார் ஆகியோர் வாழ்த்து மடல் வாசித்தனர்.
சிருங்கேரி சாரதா மண்டபத்தில் விதுசேகர பாரதீ சுவாமிகள் பேசியது: மனிதர்கள் எல்லோருக்கும் ஏதாவது தேவை இருக்கிறது. எந்தப் பொருள் மீது ஆசை வருகிறதோ, அந்தப் பொருளை வைத்திருப்பவரிடம் கேட்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. ஆசை இருக்கலாம். ஆனால், தர்மத்திற்கு விரோதமாக இருத்தல் கூடாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்தல், பகவத் ஆராதனை செய்தல் போன்ற ஆசைகள் இருப்பதே சிறந்தது.
நமக்கு எல்லாவற்றையும் கொடுப்பவன் இறைவன். எனவே எது நமக்குத் தேவையோ அதை இறைவனிடம்தான் கேட்கவேண்டும். தன் பக்தர்களுக்கு எதைக் கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கவேண்டும் என்பது பகவானுக்கு நன்றாகத் தெரியும். யார் பகவானை பக்தியோடு ஆராதிக்கின்றனரோ, அவர்களுக்கு கேட்டது கிடைக்கும்.
வருங்கால தலைமுறைக்கும் இறைபக்தி விஷயங்களை சொல்லிக் கொடுக்கவேண்டும். வயதான பிறகு பக்தி செலுத்தலாம் என இருக்கக் கூடாது. குழந்தைப் பருவத்திலேயே பக்தி வந்தால்தான் அது தொடர்ந்து நீடிக்கும். தர்மத்திற்கு விரோதமாக செயல்படக் கூடாது. முன்னோர்கள் காட்டிய தர்ம வழியில் நல்ல விஷயங்களை செய்யவேண்டும் என்றார்.
தொடர்ந்து சன்னியாசி கிராமத்திலுள்ள விவேக சம்வர்த்தினி சபாவுக்கு சுவாமிகள் சென்று பார்வையிட்டார். முன்னதாக வீரவநல்லூர், சுத்தமல்லி, கோடகநல்லூர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். சுவாமிகளுடன் சிருங்கேரி சாரதா பீடம் முதன்மை நிர்வாக அதிகாரி வி.ஆர்.கெளரிசங்கர் மற்றும் பக்தர்கள் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com