தொடக்கக் கல்வித் துறையில் பணி நிரவல் மாறுதலுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் முறையை நிறுத்திவிட்டு, பழைய முறையையே தொடரச் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராசு, மாவட்டச் செயலர் செய்யது இப்ராகீம் மூசா, மாவட்ட பொருளாளர் துரை ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறைக்கு உள்பட்ட அரசு, ஊராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் நடைபெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் வழக்கமான நடைமுறையை மாற்றி ஆன்லைன் முறையில் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் பலமணிநேரம் காத்திருக்க நேரிடுகிறது. குறிப்பாக, ஆசிரியைகள் இரவு 10 மணிவரை தனியாக கவுன்சிலிங்கில் பங்கேற்று, நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்ப வேண்டியுள்ளது.
2017-18ஆம் ஆண்டுக்கான தொடக்கக் கல்வி மாறுதலுக்கான அட்டவணைப்படி கடந்த திங்கள்கிழமை நடந்த மாறுதலில் இம்மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய 4 நிமிடத்தில் முடிந்தது.
ஆனால், இதர 31 மாவட்டங்களிலும் கலந்தாய்வு முடிய நாள் முழுவதும் ஆனதால், அடுத்த மாறுதல் கோரும் ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இதனால், அன்றைய தேதி அட்டவணைப்படி நடத்தப்பட வேண்டிய பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, ஒன்றியத்துக்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வு தனியாக அடுத்த நாளுக்கு நடத்தும் சூழல் ஏற்பட்டது.
இதனால், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அனைத்து மாறுதல்களும் நடைபெறாமல் மாலை 5மணிவரை மாவட்டத்தில் உள்ள 21 ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியைகள் காலை 9 மணியிலிருந்து கொளுத்தும் வெயிலால் அவதியடைந்தனர். வழக்கமாக நடைபெறும் மாறுதலாக இருந்திருந்தால் ஒரு மணி நேரத்தில் முடிந்திருக்கும்.
பள்ளிக் கல்வித் துறையில் மாநில சீனியாரிட்டி பயன்படுத்துவதால் ஆன்லைன் கவுன்சிலிங் சாத்தியம். ஆனால், தொடக்கக் கல்வித் துறையில் ஒன்றிய சீனியாரிட்டி பின்பற்றுவதால் பெரும் சிரமமேற்படுகிறது. எனவே, மீண்டும் பழைய முறையையே அமல்படுத்த வேண்டும். ஆன்-லைன் முறையை நிறுத்த வேண்டும் என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.