திருநெல்வேலியில் புதன்கிழமை இரவு சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருநெல்வேலியில் கடந்த சில வாரங்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. பருவமழைகள் பொய்த்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. சாலைகளில் கானல்நீர் தோன்றுவதோடு, அனல்காற்றும் வீசுவதால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இளநீர், நுங்கு, குளிர்பானக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கம்பங்கூழ், கேப்பைக்கூழ், பதனீர் போன்ற பாரம்பரிய திரவ உணவுகளை இளைஞர்களும் விரும்பி வாங்கிப் பருகுவதைக் காணமுடிகிறது.
பாளையங்கோட்டையில் புதன்கிழமை பகலில் 102 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்நிலையில் இரவு 7.30 மணிக்கு மேல் கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. காற்றின் வேகம் குறைந்திருந்ததால் சாரல் மழையாக பெய்தது. கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் சாரல் பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.