பாசனக் கால்வாய், குளங்களை தூர்வார வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாசனக் கால்வாய், குளங்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாசனக் கால்வாய், குளங்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி கால்வாய், பாளையம் கால்வாய், கோடகன் கால்வாய், கன்னடியன் கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய் ஆகிய 7 கால்வாய்கள் மூலம் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
இக்கால்வாய்களில் வளர்ந்து பரவிஇருக்கும் அமலை, காட்டாமணக்கு செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். பழுதடைந்துள்ள மதகுகள், பலமிழந்து காணப்படும் கால்வாய் கரையை சீரமைக்க வேண்டும்.
தாமிரவருணிப் பாசனத்தில் மொத்தமுள்ள 2518 மானாவாரி, நீர்வரத்து குளங்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளங்களை ஆழப்படுத்துதல் மூலம் மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து வைக்க முடியும். எனவே, தென்மேற்குப் பருவ மழைத் தொடங்கும் முன்பாக கால்வாய், குளங்களில் தூர் வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொழுதுபோக்கு பூங்கா: பசுமை மேலப்பாளையம் அமைப்பின் தலைவர் ஒய். சலீம் தலைமையில் நிர்வாகிகள் டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ. விடம் அளித்த மனு: மேலப்பாளையம் ஹாமீம்புரம் கன்னிமார் குளத்தை முழுமையாக தூர்வார வேண்டும். சாக்கடை கழிவுகள், குப்பைகள் கலப்பதால் இக்குளம் மாசுபடுவதை தடுக்க வேண்டும். கழிவுநீர் சாக்கடை ஓடைகளை ஒருங்கிணைத்து குளத்தின் மதகு பகுதியில் குன்னாணி ஓடையில் இணைக்க வேண்டும்.
குளத்தின் சேதமடைந்துள்ள மதகுகளை சீரமைப்துடன், கால்வாய் கரையை பலப்படுத்தி மேல்தளத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் நடைமேடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் குளத்தை சீரமைப்பதன் மூலம் குளத்தின் கிழக்குப் பகுதியில் பசுமை பொழுதுபோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com