தொழிலாளி கொலை வழக்கு: கட்டட ஒப்பந்ததாரருக்கு ஆயுள் சிறை

திருநெல்வேலி மாவட்டம்,  கரிவலம்வந்தநல்லூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கட்டட ஒப்பந்ததாரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து 
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம்,  கரிவலம்வந்தநல்லூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கட்டட ஒப்பந்ததாரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து  நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள வீராணபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜீவராஜ் (28). கூலித்தொழிலாளி. இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (45). புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்.  
இருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக ஜீவராஜ் தரப்பினர் முத்துராஜை கொலை செய்தனர். இவ் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜீவராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு பிணையில் வெளியே வந்தார்.
இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி அச்சன்குளம் கண்மாய் அருகே ஜீவராஜ் சென்று கொண்டிருந்தபோது முத்துராஜின் உறவினரும், கட்டட ஒப்பந்ததாரருமான சந்திரன் (46),  அவரது மனைவி லிங்கம்மாள் ஆகியோர் சேர்ந்து அவரை மண்வெட்டியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜீவராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து சந்திரன், லிங்கம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர்,  குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் இருந்து லிங்கம்மாள் விடுவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com