செப்.9இல் தாமிரவருணி தூய்மைப் பணி: 25 கல்லூரிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
தாமிரவருணியை தூய்மைப்படுத்தும் பணிக்காக 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்று வரும் 9ஆம் தேதி தாமிவருணி ஆற்றங்கரைகளில் 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர், மாணவிகள் ஒரே நேரத்தில் தூய்மைப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தாமிரவருணியை தூய்மைப்படுத்தும் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
அண்ணா பல்கலைக் கழகத்தின் மூலம், தாமிரவருணியை தூய்மைப்படுத்துதல் தொடர்பான வரைவுத் திட்டம் தயார் செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒன்றிணைத்து தாமிரவருணி ஆற்றங்கரைகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு அமைப்புகள் தூய்மைப் பணியை தொடர்ந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரும் 9ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை ஒன்றிணைத்து தூய்மைப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்தந்தப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபடும் மாணவர்கள், மீண்டும் குப்பைகள சேகரமாகாமல் தடுக்கும் விதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேவைப்படும் பகுதிகளில் குப்பைத் தொட்டிகள், கழிப்பறைகள் அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கலாம். வரும் சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரை இந்த தூய்மைப் பணி நடைபெறும். சிறப்பாக செயல்படுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், அண்ணா பலக்லைக் கழக திருநெல்வேலி மண்டல டீன் சக்திநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, கோட்டாட்சியர் மைதிலி, மாநகர நகர்நல அலுவலர் பொற்செல்வன், நகராட்சிகளின் மண்டல இணை இயக்குநர் மாஹின் அபுபக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
