திருநெல்வேலியில் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் ஜீவன் உத்கர்ஷ் என்ற புதிய திட்டத்தின் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி எல்ஐசி கோட்டத்திற்கான அறிமுக விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது. முதுநிலை மண்டல மேலாளர் கே.வசந்த்குமார் திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியதாவது: ஜீவன் உத்கர்ஷ் திட்டம் ஒற்றைத் தவணை பிரீமியத்துடன் பங்குச் சந்தை சாராத லாபத்துடன் கூடிய சேமிப்பு மற்றும் பாதுகாப்பு அடங்கிய திட்டமாகும். ஒற்றைத் தவணை பிரீமியத்தின் பத்து மடங்கை ஆயுள் காப்பீடாக வழங்கும் குறுகிய காலத் திட்டமாகும். குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கான சிறந்த திட்டமாகும்.
அதிக வட்டி ஈட்டும் வைப்பு நிதி போன்ற காப்பீட்டுத் திட்டம். இதில் 6 முதல் 47 வயது வரையிலானவர்கள் சேரலாம். முதிர்வு தொகையை மொத்தமாகவோ அல்லது விருப்பத்திற்கேற்ப 5,10, 15 ஆண்டுகளுக்கு தவணை முறையிலோ பெறலாம்.
திட்டத்தில் சேர்ந்த 3 மாதங்களில் 63 சதவீத தொகையை கடனாகப் பெறும் வசதியுள்ளது. பாலிசியை எந்தக் காலத்திலும் சரண்டர் செய்யலாம். முதிர்வுத் தொகைக்கு வருமான வரி பிடித்தம் கிடையாது. பாலிசி காலம் 12 ஆண்டுகளாகும். குறைந்தபட்ச காப்புத்தொகை ரூ.75 ஆயிரமாகும்.
திருநெல்வேலி கோட்டத்தில் நிகழ் நிதியாண்டில் புது வணிக இலக்காக 1 லட்சத்து 51 ஆயிரம் பாலிசிகளும், ரூ.229 கோடி முதல் பிரீமியம் வசூலிக்கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 31 ஆம் தேதி வரை 36 ஆயிரத்து 910 பாலிசிகள் புதிதாகத் தொடங்கப்பட்டு, முதல் பிரீமியமாக ரூ.86.66 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தென்மண்டலத்தில் பிரீமியம் அடிப்படையில் இலக்கினை அடைவதில் திருநெல்வேலி கோட்டம் முதலிடத்தில் உள்ளது. மைக்ரோ இன்சூரன்ஸ் துறை மற்றும் வங்கிகள் மூலமாக ஆயுள் காப்பீடு விற்பனை செய்யும் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்றார் அவர். விழாவில் அதிகாரிகள் இ.கே.வெங்கடகிருஷ்ணன், ஜி.குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.