நெல்லை அறிவியல் மையத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் புத்தாக்க மையம் திறப்பு

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.1.7 கோடியில் கட்டப்பட்டுள்ள புத்தாக்க மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
Updated on
1 min read

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.1.7 கோடியில் கட்டப்பட்டுள்ள புத்தாக்க மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பாக தெரிவித்து துறைசார்ந்த அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று கண்டுபிடிப்பை மேம்படுத்த வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் மூத்த காப்பாளர் கே.மதனகோபால் தலைமை வகித்தார்.
அவர் பேசியதாவது: மத்திய அரசின் கலாசார அமைச்சகம், தேசிய அறிவியல் அருங்காட்சியக குழுமம் சார்பில் நாடு முழுவதும் 26 மாவட்ட அறிவியல் மையங்கள் செயல்படுகின்றன.
இதுதவிர இந்த அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு, அந்தந்த மாநில அரசுகளின் பராமரிப்பின் கீழ் 24 மையங்கள் செயல்படுகின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியாவில் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி அறிவுசார் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை உற்பத்தி வளர்ச்சி பெருகி வருகிறது.
அதற்கேற்ப புதிய தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகளின் தேவைகள் அதிகம் உள்ளன. மாணவர் சமுதாயத்தை ஆய்வுநோக்கில் வழிநடத்துவதோடு ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு புத்தாக்க மையங்கள் (இன்னோவேஷன் ஹப்) உருவாக்கப்பட்டு வருகின்றன.
தில்லி, பெங்களூர், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் புத்தாக்க மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
தென்னிந்தியாவில் 5 அறிவியல் மையங்களில் புதிதாக புத்தாக்க மையம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி திருநெல்வேலியில் ரூ.1.7 கோடியில் திறக்கப்பட்டுள்ளது.
கல்வியறிவு பெற்றவர்கள், பெறாதவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் உள்பட அனைத்து தரப்பினரும் இங்கு உறுப்பினராக சேரலாம்.
பள்ளி மாணவர்கள் ஆண்டுக் கட்டணமாக ரூ.500-ம், கல்லூரி மாணவர்கள் மற்றும் இதரர்கள் ரூ.2,000 ஆயிரமும் செலுத்த வேண்டும். தங்களிடம் உள்ள புதிய கண்டுபிடிப்பு சிந்தனைகள், தொழில்நுட்ப புதுமைகளை இங்கு தெரிவித்து அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து கண்டுபிடிப்புகளை மேம்படுத்த முடியும். பின்னர் அந்தக் கண்டுபிடிப்பை உற்பத்தி சார்ந்த சாதனமாகவோ, தொழில்நுட்பமாகவோ மாற்றி வர்த்தக ரீதியில் பயன்படுத்த முயற்சிக்கலாம்.
புத்தாக்க மையங்கள் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்கள் உள்பட வாரம் முழுவதும் செயல்படும். புதிய தொழில்நுட்ப கலந்தாலோசனைக் கூட்டங்கள், பயிலரங்குகள் போன்றவை நடத்தப்படும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை அதிகரிக்க புத்தாக்க மையம் உதவும் என்றார் அவர்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி.பாஸ்கர், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குநர் பி.அய்யம்பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தொடர்ந்து மாணவர்-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட  அறிவியல் அலுவலர் கே.நவராம்குமார், கல்வி உதவியாளர்கள் மாரிலெனின், பொன்னரசன் உள்பட பலர்
கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com