Enable Javscript for better performance
பொலிவுறு நெல்லை ஆய்வு செய்ய களம் இறங்குகிறது பொறியியல் மாணவர்கள் குழு: அரசு அதிகாரிகள், மாணவர்களுக்க- Dinamani

சுடச்சுட

    

    பொலிவுறு நெல்லை ஆய்வு செய்ய களம் இறங்குகிறது பொறியியல் மாணவர்கள் குழு: அரசு அதிகாரிகள், மாணவர்களுக்கு பயிற்சி

    By DIN  |   Published on : 22nd October 2017 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டத்தை பொலிவுறு மாவட்டமாக மாற்றும் வகையில் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய பொறியியல் மாணவர்கள் குழு ஈடுபடுத்தப்படவுள்ளது.
     மாவட்ட நிர்வாகம், திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலைக் கழகம், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க மையம் (இடிஐஐ) ஆகியவை இணைந்து பொலிவுறு நெல்லை மாவட்டம் என்பதற்கான ஆலோசனைகள், திட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பை சனிக்கிழமை நடத்தின.
    மண்டல அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியது:  
    ஸ்மார்ட் என்ற வார்த்தை தனி மனிதனுக்கு மட்டுமல்லாது அனைத்து துறைகள், சமூகம் சார்ந்து பயன்படுத்த வேண்டியதாக உள்ளது. இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தை பொலிவுறு மாவட்டமாக மாற்றும் வகையில் திட்டப் பணிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது. முதலில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். பின்னர், சுகாதாரப் பணிகளை மேம்படுத்த வேண்டும். திறந்தவெளியில் கழிப்பறை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்கேற்ப உள்ளாட்சி கட்டமைப்புகளை எப்படி மேம்படுத்துவது என்பதை ஆராய வேண்டும்.
    குடிநீர் விநியோகத்தை ஆளில்லாமல் செய்வது, அனைத்துத் துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துதல், ஒவ்வொரு துறையும் தங்களது திட்டங்களை நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி செயல்படுத்துதல் என்ற வரையறைக்குள் கொண்டுவர வேண்டும். அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.
    அண்ணா பல்கலைக் கழக திருநெல்வேலி மண்டல டீன் ஜி. சக்திநாதன் பேசியது:
    திருநெல்வேலி மாவட்டத்தை அனைத்து நிலைகளிலும் பொலிவுறு மாவட்டமாக மாற்ற திட்டத்தைச் செயல்படுத்த அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டின் கீழ் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள 70 பொறியியல் கல்லூரிகளில் இருந்து தனித்தனியே மாணவர்கள் குழு தேர்வு செய்யப்படவுள்ளது.
    எலக்ட்ரானிக்ஸ், இயந்திரவியல், சிவில், தகவல் தொழில்நுட்பம், செயற்கைக் கோள் என அனைத்து நிலை பொறியியல் மாணவர்களும் அவரவர் எல்லைக்குள்பட்டு மாவட்டத்தை ஆய்வு செய்து அதற்கான புதிய திட்டங்களை வரைவு அறிக்கையாகத் தயார் செய்யவுள்ளனர். இவற்றில் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு அரசுக்கு பரிந்துரை செய்து அதன் மூலமாக மாவட்டத்தை பொலிவுறு நெல்லையாக மாற்றுவோம். இப்போது, 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேவைக்கேற்ப கூடுதல் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றார் அவர்.
    இந்த பயிற்சி வகுப்பில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாராயணன் நாயர், இடிஐஐ துணை இயக்குநர் ஆர். சிவசங்கர் ஆகியோர் திட்டத்தின் நோக்கம், அவசியம் குறித்து விளக்கினர்.  மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai