கல்லிடைக்குறிச்சியில் ரயில்வே கேட் அமைக்கக் கோரி, பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கல்லிடைக்குறிச்சி முன்னாள் பேரூராட்சி தலைவர் இசக்கிபாண்டியன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு:
கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப் பேரூராட்சிக்கு உள்பட்ட காட்டுமன்னார்கோவில், தீட்சன்பச்சேரி கிராமங்கள் ஊரின் மேற்கு பகுதியில் உள்ள திருநெல்வேலி-செங்கோட்டை ரயில்வே தண்டவாளத்தை கடந்து தாமிரவருணி நதியின் தென்புறமும், கன்னடியன் கால்வாயின் வடபுறமும் அமைந்துள்ளன.
வயல்களுக்கு செல்லும் மக்களும், கோயில் விழாக்களின் போது தீர்த்தம் எடுத்து வர செல்லும் பக்தர்களும் இந்த ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இப் பகுதியில் புதிதாக தரைப்பாலம் அமைக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இதனால் அறுவடை இயந்திரம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகும் நிலை உள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறையினரிடம் முறையிட்டதன் பேரில் தரைப்பாலம் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட பகுதியில் ரயில்வே கேட் அமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.