திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சாலை, பேருந்து வசதி கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த மனு: சுத்தமல்லி ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகரில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். திருநெல்வேலி சந்திப்பில் இருந்து அரசு பேருந்து நாள் ஒன்றுக்கு 4 முறை இயக்கப்படுகிறது. இதுபோக கடந்த 18 ஆண்டுகளாக டவுனில் இருந்து 2 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஒரு வாரமாக சிற்றுந்து இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி-கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறார்கள்.
எனவே, சிற்றுந்துகளை முறையாக இயக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாலை வசதி தேவை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலர் எம்.சி.ராஜன் தலைமையில் அளித்த மனு: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாளையங்கோட்டை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிலை எண்-3 அருகே சுமார் 300 மீட்டர் தொலைவுள்ள அணுகுசாலை தார்ச்சாலையாக போடப்படாமல் மண் சாலையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே, அந்த சாலையை உடனே அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.