திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் அமைத்தது தொடர்பாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்துநர் இல்லாத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப் பேருந்துகளில் பயணிப்போருக்கு டிக்கெட் வழங்க பேருந்து நிலையத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறி, மாநகராட்சி உதவிப் பொறியாளர் லெனின் தலைமையில் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் கவுன்டரை பறிமுதல் செய்ய செவ்வாய்க்கிழமை சென்றனர்.
இதனால் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்களைக் கண்டித்து போக்குவரத்துக் கழகத்தினர் தரையில் அமர்ந்து டிக்கெட்களை வழங்கினர். உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பறிமுதல் செய்து லாரியில் ஏற்றப்பட்ட டிக்கெட் கவுன்டர் பெட்டி பேருந்து நிலைய வளாகத்திலேயே மீண்டும் இறக்கி வைக்கப்பட்டது.