திருநெல்வேலி மாநகரப் பகுதியில் விழாக்களின்போது மீதமாகும் உண்ணத் தகுந்த நல் உணவுகளை ஏழைகளுக்காக சேகரிக்கும் புதிய திட்டத்தை திருநெல்வேலி மாநகராட்சியுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
திருமண மண்டபங்கள் மற்றும் விழாக்களில் மீதமாகும் உணவுகளை சேகரித்து ஏழை, எளிய, பசியால் வாடும் நபர்களுக்கு நோ ஃபுட் வேஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த அமைப்பு சார்பில் திருநெல்வேலியில் இத்திட்டத்தை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். மாநகராட்சி ஆணையர் (பொ) நாராயணன்நாயர், நெல்லை ரன்னர்ஸ் டிரஸ்ட் நிர்வாகி மருத்துவர் பிரான்சிஸ் ராய், லக்ஷ்மி நிரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக தன்னார்வ அமைப்பினர் கூறுகையில், 2014இல் தொடங்கப்பட்ட நோ ஃபுட் வேஸ்ட் திட்டம் சென்னை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், தருமபுரி நகரங்களுக்கு அடுத்ததாக திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ளது. உணவு மீதமாகும் சூழலில் அதுகுறித்து 90877 90877 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தெரிவித்தால், அந்த இடத்திற்கே சென்று உணவு சேகரிக்கப்பட்டு பசியால் வாடுவோருக்கு அளிக்கப்படும். எங்கள் அமைப்பு சார்பில் இதுவரை சுமார் 200 டன் உணவு வீணாகாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றனர்.