கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டிலேயே சுயமாக பிரசவம் பார்ப்பதை யாரும் எந்தக் காரணம் கொண்டும் ஆதரிக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்-தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கூறினார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் அமைந்துள்ள 8864 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு போராடி பெற்றுள்ளது. இதில் குசும்புலியார் எனும் 894 ஹெக்டேர் பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். ஆனால், தனியார் நிறுவனத்தினர் அங்கிருந்த அடர்ந்த வனப் பகுதிகளை அழித்துவிட்டனர். மீண்டும் அப்பகுதியில் அடர்ந்த வனப் பகுதிகளை அரசு உருவாக்க வேண்டும். இந்தப் பகுதிதான் தென்காசி, கு ற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கான தூய்மையான காற்றுக்கு காரணம். மீதியுள்ள பகுதியை தமிழக அரசின் தேயிலை தோட்டக் கழகம் கையகப்படுத்தி அங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும்.
சில தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மாஞ்சோலையில் தமிழகத் தொழிலாளர்கள் மிகவும் குறைந்தளவில்தான் உள்ளனர். அஸாம், பிகார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் அதிகம் உள்ளனர். தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் பல சாலைகளை நான்கு மற்றும் ஆறுவழிச் சாலைகளாக மாற்ற வேண்டும். திருமங்கலம்-குற்றாலம் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற அரசு அறிவித்துள்ளது. இதை வரவேற்கிறேன். இந்தப் பணிகளை தரமாக இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். மருத்துவம் என்பது பின்னோக்கிப் போகக் கூடாது. மேல்நோக்கிதான் செல்ல வேண்டும். வீட்டில் பிரசவம் செய்வதால் எத்தனையோ தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர். வீட்டில் தாங்களாக பிரசவம் பார்ப்பதை யாரும் எந்தக் காரணம் கொண்டும் ஆதரிக்கக் கூடாது என்றார் அவர்.
பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலர் இன்பராஜ், ஒன்றியச் செயலர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.