பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் மருத்துவர்கள், உபகரணங்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் தவிப்பு

பேட்டையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் நோயாளிகள் வருகை அதிகரித்து வரும் சூழலில் மருந்தாளுநர்கள்,

பேட்டையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் நோயாளிகள் வருகை அதிகரித்து வரும் சூழலில் மருந்தாளுநர்கள், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். 
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பேட்டையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப் பகுதி மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1956 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி அப்போதைய திருநெல்வேலி நகராட்சி சார்பில் மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு மட்டுமே தொடங்கப்பட்டது. அதன்பின்பு இங்கு மகப்பேறு மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சை தவிர்த்து இயற்கையான மகப்பேறு மட்டும் பார்க்கப்பட்டது. 
இரு மருத்துவர்கள், நான்கு செவிலியர்கள், மூன்று மருந்தாளுநர்கள், சித்த மருத்துவர், 3 தொழில்நுட்ப உதவியாளர்களுடன் 24 மணி நேரமும் இம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இப்போது மருந்தகம், புறநோயாளிகள் பிரிவு,  நம்பிக்கை மையம், காசநோய் பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. கர்ப்பிணிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு இலவசமாக ஸ்கேன் எடுக்க இயந்திரம் உள்ளது. இருப்பினும் போதிய செவிலியர்கள் இல்லாததாலும், மருந்தாளுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இல்லாததாலும் மருத்துவமனையில் பொதுமக்கள் வெகுநேரம் காத்திருக்கிறார்கள்.
சிகிச்சை கிடைக்காததால் உயிரிழப்பு: இதுதொடர்பாக பேட்டையைச் சேர்ந்த இஸ்மாயில் கூறியது: பேட்டையில் உள்ள காயிதேமில்லத் மாநகராட்சி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப இங்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்தாமல் வரிவசூல்மையம், உணவகம் உள்ளிட்டவற்றை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் மகப்பேறு வலி ஏற்பட்டு வரும் பொதுமக்களுக்கு மகப்பேறு (அறுவைச்சிகிச்சை முறை) பார்க்க வழியில்லை. ஏற்கெனவே, சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில் பேட்டையில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயச்சூழல் ஏற்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஆட்டோவில் கருங்காடு பகுதியில் திடீர் பிரசவம் நிகழ்ந்த நிலையில் பேட்டை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க வழியில்லாததால் அவர் உயிரிழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை கண்டறிய உதவும் வகையில் வழங்கப்பட்ட பிளேட்லெட் கவுண்ட் இயந்திரத்திற்கு போதிய மருந்துகள் வழங்கப்படாததால் பரிசோதனைக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள் என்றார்.
அடிப்படை வசதிகள் இல்லை: இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் ஐ.உஸ்மான்கான் கூறுகையில், பேட்டையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. சித்த மருத்துவப் பிரிவும் செயல்படவில்லை. புதிய குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை முறையாக திட்டமிடாததால் பேட்டை பகுதி நோயாளிகளை உயர்சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதில் காலதாமதமாகி உயிரிழப்பு அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இங்கு வரும் மக்களுக்கு போதுமான அளவில் சிகிச்சை அளிக்க பணியாளர்கள் இல்லை. மருத்துவமனையின் அருகில் பாய்ந்தோடும் கழிவுநீர் ஓடையில் இருந்து வீசும் துர்நாற்றம் மழைக்காலங்களில் மருத்துவமனை வளாகத்தில் இருக்க முடியாத அளவுக்கு உள்ளது. ஆகவே, இந்த மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை வசதியை ஏற்படுத்தவும், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்களை நியமிக்கவும் மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் ஆம்புலன்ஸ் வாகனமும் வழங்க வேண்டும் என்றார்.
ரூ.1 கோடியில் புதிய கட்டடம்: இதுகுறித்து மாநகர நல அலுவலர் பொற்செல்வன் கூறியது:  பேட்டை மாநகராட்சி மருத்துவமனையைப் பொருத்தவரை மருத்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. சளி, காய்ச்சல், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய் உள்ளிட்ட அனைத்துக்கும் தேவையான அடிப்படை மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 3 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். செவிலியர்கள், மருந்தாளுநர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க உயரதிகாரிகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. தினமும் மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சிறப்பு மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அதன்படி பொதுமருத்துவர் (திங்கள்), மகப்பேறு மருத்துவர் (செவ்வாய்), குழந்தைகள் நல மருத்துவர் (புதன்), உடற்கூறு சிறப்பு மருத்துவர் (வியாழன்), பல் நோய் சிறப்பு மருத்துவர் (வெள்ளி) ஆகியோர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பிளேட்லெட் இயந்திரத்திற்கான மருந்து வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் இம் மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்தப் பணிகள் முடிவடையும் போது அறுவைச் சிகிச்சை மூலம் மகப்பேறு வசதி உள்ளிட்டவை கிடைக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com