Enable Javscript for better performance
நெல்லை புத்தகத் திருவிழா: 6 நாள்களில் ரூ.40 லட்சம் புத்தகங்கள் விற்பனை- Dinamani

சுடச்சுட

  

  நெல்லை புத்தகத் திருவிழா: 6 நாள்களில் ரூ.40 லட்சம் புத்தகங்கள் விற்பனை

  By DIN  |   Published on : 09th February 2018 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் 6 நாள்களில் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. குழந்தைகள், வரலாறு, ஆன்மிக நூல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
  தேசிய புத்தக அறக்கட்டளை, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஆகியவை சார்பில் நெல்லை புத்தகத் திருவிழா கடந்த 3 ஆம் தேதி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கியது. 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் வாங்க வருவோருக்கு வசதியாக இந்தியன் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரங்குகளில் வங்கிகளின் அட்டைகளைப் பயன்படுத்தும் வகையில் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாணவர்களின் கலைப்போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  பொதுமக்களிடம் வரவேற்பு: தினமும் முற்பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இலக்கியம், பொதுஅறிவு, போட்டித்தேர்வு புத்தங்கள் உள்ளிட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் சுமார் 10 லட்சம் புத்தகங்கள் ரூ. 5 முதல் பல்வேறு விலைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. 
  குழந்தைகளைக் கவரும் வகையில் ஓவியம், பேச்சுப்பயிற்சி, ஆங்கிலத்தில் எளிய பொதுத்தகவல் புத்தகங்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளன. 
  இதுதவிர மழலைப் பாடல்கள் முதல் பொறியியல் பாடங்கள் வரையிலான குறுந்தகடுகளும் இடம்பெற்றுள்ளன. அறிவியல் உபகரணங்கள் அரங்கு, பூவுலகின் நண்பர்கள் சார்பில் சிரட்டை ஓவியங்களுடன் கூடிய அரங்கு ஆகியவை மாணவர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.
  திருக்குறள், பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள் மட்டுமன்றி சங்ககால இலக்கியங்களின் தொகுப்புகள், தொல்காப்பிய உரை நூல்கள், மகாத்மா காந்தியின் சுயசரிதை நூலான சத்திய சோதனை ஆகியவையும் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழுக்கு இணையாக ஆங்கில நூல்களும் விற்பனையாகி வருகின்றன. 
  ஷேக்ஸ்பியர் கவிதைகள், மேற்கத்திய நாடகங்கள், லத்தீன் அமெரிக்க படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் பலர் தேடிப்பிடித்து வாங்கிச் செல்கிறார்கள். மாதிரி வினா-விடைகள், நீட் தேர்வு வழிகாட்டி புத்தகங்கள் மாணவர்களின் தேர்வாக உள்ளது. ஆன்மிகம், ஜோதிடம், ஆரோக்கியம், சமையல்கலை நூல்களை பெண்கள் அதிகளவில் வாங்குகிறார்கள்.
  நேரத்தை நீட்டிக்க உத்தரவு: இதுகுறித்து சார்ஆட்சியர் (பயிற்சி) க. இளம்பகவத் கூறியது: நெல்லை புத்தகத் திருவிழாவுக்கு மக்களிடையே சிறந்த வரவேற்பு உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே வாசிப்புப் பழக்கத்தின் நன்மையைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இக் கண்காட்சியை 6 நாள்களில் 120-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். 
  ரூ.500-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு பரிசுக்கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் ரூ.40 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. குடிநீர், கழிப்பறை, உணவுவிடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளைக் கவரும் வகையில் பலூன், தொப்பிகள் வழங்கப்படுகின்றன. 
  வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.9, 10, 11) பொதுமக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் இரவு 10 மணி வரை நீட்டிப்பு செய்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 
  ஏற்கெனவே கல்லூரி மாணவர்களுக்கு நூல் திறனாய்வுப் போட்டி நடத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலத்தில் புகழ்பெற்ற 5 எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து மாணவர்கள் திறனாய்வு கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் வெற்றி பெறுவோருக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும், இரண்டாம், மூன்றாம் பரிசாக முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும் வழங்கப்படும். 
  ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமை மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு சுத்தம் புத்தகம் தரும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு, அதிகாரிகளைக் கொண்டு தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 
  பள்ளி வளாகம், தன்சுத்தம் ஆகிய 5 வழிமுறைகளின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு புத்தகத் திருவிழாவில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் புத்தகங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
  பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்திற்கு ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai