Enable Javscript for better performance
பயிர்களைச் சேதப்படுத்தும் யானைகளை தேனீக்களைக் கொண்டு விரட்ட நடவடிக்கை: புலிகள் காப்பக கள இயக்குநர் த- Dinamani

சுடச்சுட

    

    பயிர்களைச் சேதப்படுத்தும் யானைகளை தேனீக்களைக் கொண்டு விரட்ட நடவடிக்கை: புலிகள் காப்பக கள இயக்குநர் தகவல்

    By DIN  |   Published on : 09th February 2018 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயிர்களைச் சேதப்படுத்தும் யானைகளை, மேற்கத்திய நாடுகளைப்போல தேனீக்களைக் கொண்டு விரட்ட  விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று களக்காடு -முண்டன்துறை புலிகள் காப்பக கள இயக்குநரும், தலைமை வனப் பாதுகாவலருமான ஏ. வெங்கடேஷ் தெரிவித்தார்.
    களக்காடு தலையணையில் வியாழக்கிழமை நடைபெற்ற களக்காடு, திருக்குறுங்குடி கிராம வனக் குழு உறுப்பினர்களுக்கான தேனீ வளர்ப்பு பயிற்சி முகாமில் அவர் மேலும் பேசியது:
    அகஸ்தியர் மலை நிலப்பரப்பு திட்டம் 2014-2015ஆம் ஆண்டு 1428 லட்சத்தில் தொடங்கப்பட்டது. இதுவரை இத்திட்டத்துக்காக ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.250 லட்சம் குமரி முதல் குமுளி வரையுள்ள கிராமங்களுக்கு நுண் திட்டங்களை அமல்படுத்தவும், மீதமுள்ள தொகை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, இதர செலவினங்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் மத்திய அரசு இத்திட்டத்துக்காக ரூ. 2 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்நிதி கிராம மக்களின் வளர்ச்சிக்கும், உயிர்ப்பன்மை பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படும்.
    யானைகள் வனப் பகுதியைவிட்டு வெளியேறி பயிர்களைச் சேதப்படுத்தும் போக்கு பரவலாக உள்ளது. இதனைத் தடுக்க மேற்கத்திய நாடுகளைப் போன்று, வனப்பகுதியைவிட்டு யானை வெளியேறும் பகுதிகளிலும், தோட்டங்களிலும் தேனீக்களை வளர்க்க பெட்டி அமைத்து, தேனீக்களைக் கொண்டே யானைகளை காட்டுக்குள் விரட்ட பரீட்சார்த்த முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடுத்தகட்டமாக குமரி முதல் குமுளி வரையுள்ள ஆறுகள், குளங்கள், ஓடைகள் உள்ளிட்டவற்றில் அதன் பயனாளிகளான விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பங்களிப்புடன் நீர்ப்பன்மையை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.
    தேனீ வளர்ப்பு: களக்காடு, திருக்குறுங்குடி சுற்றுவட்டாரத்தில் தேனீ வளர்ப்புக்கு உகந்த சூழ்நிலைகள் உள்ளன. விவசாயிகள், கிராம மக்கள் தங்களது தோட்டங்களில் தேனீ வளர்த்து பயன்பெறலாம். தேனீ வளர்க்கும் விவசாயிகளுக்கு வனத்துறை உதவி புரியும். விவசாயிகளிடமிருந்து தேனை வனத்துறையே கொள்முதல் செய்து கொள்ளும் என்றார் அவர்.
    இம்முகாமில் களக்காடு துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர், நேரு யுவ கேந்திரா இயக்குநர் மதிவாணன், வனச்சரகர்கள் திருக்குறுங்குடி புகழேந்தி, மேல கோதையாறு நடராஜன்,  திருக்குறுங்குடி சூழல் வனவர் அப்துல்ரஹ்மான் மற்றும் கிராம வனக்குழு உறுப்பினர்கள்,  விவசாயிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
    ஓய்வுபெற்ற பேராசிரியை ஜீலியட் வனிதா ராணி விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சியளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai