Enable Javscript for better performance
பாஜக, இந்து முன்னணியினர் சரணடையும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராமராஜ்ஜிய ரத யாத்திரையை வரவேற்க சென்றவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்ததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணியினர் வெள்ளிக்கிழமை சரணடையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராமராஜ்ஜிய ரதயாத்திரை கடந்த 19-ஆம் தேதி புளியரை வழியாக தமிழகத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து மதுரை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு சென்ற ரதயாத்திரை, பின்னர் தூத்துக்குடி வழியாக கடந்த வியாழக்கிழமை மீண்டும் திருநெல்வேலி வந்தது. பாளையங்கோட்டையை அடுத்த உத்தமபாண்டியன்குளம், அரியகுளம், சாரதா கல்லூரி, கேடிசி நகர் ஆகிய இடங்களில் ரதயாத்திரைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஏராளமானோர் ரதத்துடன் தங்களுடைய இரு சக்கர வாகனங்கள், கார்களில் ஊர்வலமாக வந்தனர்.
    காவல் நிலையம் முற்றுகை: இதையடுத்து தடையை மீறி ஊர்வலம் சென்றதாகக்கூறி வழக்குப் பதிவு செய்த போலீஸார், திருநெல்வேலி நகரம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த ராஜசெல்வம், கிச்சா ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
    இதையடுத்து இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் குற்றாலநாதன் தலைமையில் திருநெல்வேலி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ராஜசெல்வம், கிச்சா ஆகியோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், பின்னர் ராஜசெல்வம், கிச்சா ஆகியோரை விடுவித்தனர்.
    சரணடையும் போராட்டம்: இதன்பிறகு பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர், இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குற்றாலநாதன் ஆகியோர் தலைமையில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு நின்ற பாளை. மேட்டுத்திடல் காவல் ஆய்வாளர் பத்மாவதியிடம், நாங்கள் அனைவரும் சரணடைய வந்திருப்பதாக தயாசங்கர், குற்றாலநாதன் ஆகியோர் தெரிவித்தனர்.
    உதவி ஆணையர் பேச்சுவார்த்தை:
    அதைத்தொடர்ந்து பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் 49 பேரை இரு வேன்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
    பெண் நிர்வாகி மயக்கம்: இதையடுத்து அவர்களை பாளை. மேட்டுத்திடல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதேநேரத்தில் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் சிறைக்கு மட்டுமே செல்வோம் என பிடிவாதமாக இருந்ததால் போராட்டம் தொடர்ந்தது. இதனிடைய பாஜக மகளிர் அணி நிர்வாகி மாரியம்மாள் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    3 வழக்குகள் பதிவு: இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கூறுகையில், 'ராமராஜ்ஜிய ரதயாத்திரை விவகாரத்தைப் பொறுத்தவரையில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரதத்தின் முன்னும், பின்னும் தடையை மீறி ஊர்வலம் வந்ததற்காக செங்கோட்டை, திருநெல்வேலி புறநகரம் ஆகியவற்றில் தலா ஒரு வழக்கும், செங்கோட்டையில் முழக்கம் எழுப்பி இரு தரப்பிடையே மோதல் உருவாகும் சூழலை ஏற்படுத்தியதற்காக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விதிமீறல் எதுவும் உள்ளதா என ஆராய்ந்து வருகிறோம். ஏதாவது விதிமீறல் இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும்' என்றார்.
    இரவு வரை நீடிப்பு: பாஜக மற்றும் இந்து முன்னணியினரின் போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. இதையடுத்து, ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்ற அபராதத்திற்கு பின்பு திரும்ப ஒப்படைக்கப்படும் உள்ளிட்ட உறுதிகளை போலீஸார் தரப்பில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரவு 9.40 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai