Enable Javscript for better performance
கடையநல்லூர் அரசு மருத்துவமனையில்விரைவில் டயாலிசிஸ் மையம்: எம்எல்ஏ- Dinamani

சுடச்சுட

    

    கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் விரைவில் டயாலிசிஸ் மையம்: எம்எல்ஏ

    By DIN  |   Published on : 31st March 2018 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் விரைவில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படவுள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலரும், கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினருமான முகமது அபூபக்கர் தெரிவித்தார்.
    இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: நாடு முழுவதும் மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் முஸ்லிம் லீக் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முக்கிய  அறிவிப்பு வெளியிடப்படும்.
    வெளிநாடுவாழ் தமிழர்களின் வசதிக்காக திருவனந்தபுரம்-கொல்லம், திருச்செந்தூர் -கொல்லம் மார்க்கத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
    தமிழக அரசு முழுமையாக மத்திய அரசிடம் சரணாகதி அடைந்து விட்டது. தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களைக்கூட அதிமுக அரசு எதிர்ப்பதில்லை. மக்களவையில் பெரும் பலம் மிக்க அதிமுக , காவிரி, நீட் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக வலுவாக குரல் கொடுக்காமல் தமிழக மக்களை ஏமாற்றி விட்டது.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் விரிவாக்கம் தொடர்பாக நிபுணர்கள் குழு மூலம் ஆய்வு செய்து அதனால் ஏற்படும் பாதிப்பினை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நகரப்பகுதிக்குள் அமைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியும், அது வனப்பகுதிக்குள் அமையப் போவதாகவே தெரிகிறது. எனவே, நகரப் பகுதிக்குள் அமைக்க வலியுறுத்தி சட்டப் போராட்டத்தை முஸ்லிம் லீக் கையில் எடுக்கும். மேலும் வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி போராட்டமும் நடத்தப்படும்.
    கடந்த ஆட்சியில் கடையநல்லூருக்கு புதை சாக்கடைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் பேசியதையடுத்து அத்திட்டத்திற்கான திருத்திய மதிப்பீட்டை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எனது கோரிக்கையை ஏற்று கடையநல்லூர் ரயில் நிலையத்தை ஆதார் ரயில் நிலையமாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் இங்கு பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் அரசு நிதி மூலம் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதை மாநில சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அடுத்த வாரத்தில் தொடங்கி வைக்கிறார் என்றார் முகமது அபூபக்கர். மாநில அமைப்புச் செயலர் நெல்லை மஜீத் உடனிருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai