Enable Javscript for better performance
சேர்வலாறு அணைப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு: வனப் பகுதியில் ஓடையில் சென்று தண்ணீர் எடுத்து வரும- Dinamani

சுடச்சுட

    

    சேர்வலாறு அணைப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு: வனப் பகுதியில் ஓடையில் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை

    By DIN  |   Published on : 31st March 2018 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேர்வலாறு அணைப் பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்பு, காணிக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இல்லாததால் மக்கள் வனப்பகுதிக்குள் சென்று ஓடையிலிருந்து குடிநீர் எடுத்துவரும் நிலை உள்ளது.
    சேர்வலாறு அணைப் பகுதியில் மின்வாரிய குடியிருப்பில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 60 குடும்பத்தினரும், குடியிருப்பு அருகில் பொதுமக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும், காணிக் குடியிருப்புப் பகுதியில் காணி இன மக்கள் 30 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சேர்வலாறு அணையின் உள்பகுதியில் குகையின் நுழைவுப் பகுதியில் 3 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதிலிருந்து சக்தி கூடிய மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்து தண்ணீர் தொட்டியில் நிரப்பி விநியோகிக்கப்பட்டு வந்தது.
    இந்நிலையில், சேர்வலாறு அணையில் பராமரிப்புப் பணிக்காக தண்ணீர் முழுவதும் திறந்துவிடப்பட்டதாலும், சேர்வலாறு ஆற்றில் கலங்கிய நிலையில் தண்ணீர் ஓடுவதாலும் கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக விநியோகிக்கப்படவில்லையாம். கடந்த 15 நாள்களுக்கு முன் பெய்த மழையில் ஆழ்துளைக் கிணறுகள் முழுவதும் மண்ணால் மூடப்பட்டு தண்ணீர் எடுக்கும் மோட்டார்களும் பழுதாயினவாம். இதையடுத்து முழுமையாக தண்ணீர் விநியோகம் தடைபட்டது. இதைத் தொடர்ந்து, லாரி மூலம் கீழணைப் பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு குடியிருப்புப் பகுதியில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    இந்நிலையில், குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் பெண் குழந்தைகள் வீட்டில் உள்ள நிலையில்  கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளதாகத் தெரிவித்தனர். வீட்டின் எந்தப் பயன்பாட்டிற்கும் தண்ணீர் இல்லாத நிலையும், குடிநீருக்காக சுமார் ஒரு கி.மீ. வரை காட்டில் நடந்து சென்று தைலாத்து ஓடையில் குடங்களில் தண்ணீர் கொண்டு வரும் நிலையும் உள்ளதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் குடிநீர் விநியோகத்தை சீராக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    மின்வாரிய குடியிருப்புப் பராமரிப்பு அதிகாரிகள் தெரிவிக்கையில், மோட்டார்கள் பழுது நீக்க அனுப்பப்பட்டுள்ளன. அதற்கிடையில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதிலிருந்து தாற்காலிகமாக தனியார் ஆலை மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.
    மின்வாரிய குடியிருப்புக்கு அருகில் காணி இன மக்கள் வசிக்கும் குடியிருப்பிற்கு ஒரு குடிநீர் இணைப்பு மூலம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்தக் குழாய் மூலம் தண்ணீர் வராததாலும், சேர்வலாறு ஆற்றில் கலங்கிய நிலையில் செல்லும் நீரைப் பயன்படுத்த முடியாததாலும் தைலாத்து ஓடை நீரை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. இதுகுறித்து காணி மக்கள் கூறும்போது, இந்தக் குடியிருப்புப் பகுதியில் ஒரு குடிநீர்க் குழாய் இணைப்பு இருந்தும் பயனில்லை. தைலாத்து ஓடையில் வரும் நீரைத்தான் நாங்கள் அனைத்துப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் தைலாத்து ஓடையில் நீரோட்டம் நின்றுவிடும். அதன்பின் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். மின்வாரிய குடியிருப்பிற்கு லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்யும் நிலையில் எங்களுக்கு ஒரு குடம் தண்ணீர்கூட விநியோகம் செய்யவில்லை. நகராட்சி சார்பிலும் குடிநீர் விநியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. நாங்கள் எந்த அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகிறோம் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai