Enable Javscript for better performance
சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்த பக்தர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பங்குனி உத்திர விழாவையொட்டி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மலைப் பாதையில் போக்குவரத்து பாதிப்பால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கடும் வெயிலிலில் பக்தர்கள் தவிக்க நேர்ந்தது.
    மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு தை அமாவாசை, பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை நாள்களில் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வணங்கிச் செல்வர். வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத்தையொட்டி, சொரிமுத்து அய்யனாரைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் காரையாறில் குவிந்தனர்.
    விழாவையொட்டி, சொரிமுத்து அய்யனார், வனப்பேச்சியம்மன், சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயர், பிரம்மராட்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பிரம்மராட்சியம்மனுக்கு பொங்கலிட்டும், சொரிமுத்து அய்யனாருக்கு கிடா வெட்டியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். குலதெய்வம் தெரியாதவர்களும் சொரிமுத்து அய்யனாரை குலதெய்வமாக நினைத்து வந்து வழிபட்டுச் செல்வது இந்தக் கோயிலின் சிறப்பாகும்.                    


    காரையாறு மலைச் சாலையில் போக்குவரத்து நெரிசல்
    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பலரும் மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் வந்ததால் பாபநாசம் காரையாறு மலைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மலைப் பாதையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் தேங்கி நின்றன. கடும் வெயிலில் காட்டுப் பகுதியில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைய நேரிட்டது.
    போதிய எண்ணிக்கையில் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படாததாலும், வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பாததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
    அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜாஹிர் ஹுசைன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வனப்பகுதியில் முண்டன்துறை வனச்சரகர் கார்த்திகேயன், பாரத் ஆகியோர் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    சேர்வலாறு அணைக்கு மேல் பகுதியில் உள்ள கருப்பசாமி கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai