Enable Javscript for better performance
"மெய்மைத் தேடலே ஜென் கவிதைகள் சுழலும் மையப்புள்ளி'- Dinamani

சுடச்சுட

  

  மாயை கடந்த மெய்மைத் தேடலே ஜென் கவிதைகள் சுழலும் மையப்புள்ளியாய் அமைகின்றன என்றார் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் செளந்தர மகாதேவன். 
  திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் இலக்கியக் கருத்தரங்கின் இரண்டாம் அமர்வில், ஆழ்நிலை தேடும் ஜென் கவிதைகள் எனும் தலைப்பில் அவர் மேலும் பேசியது:
  வாழ்க்கை வாழ்வதற்கே. இயற்கை ஜென் கவிதைகளின் இலகுவான இதயம். இயற்கையை காத்தல் இன்னொரு தியானம்.  ஒவ்வொரு விநாடியையும் அனுபவித்தலை ஜென் கவிதைகள் வரிகள் மூலம் விளக்குகின்றன. மாயை கடந்த மெய்மைத்தேடல் ஜென் கவிதைகள் சுழலும் மையப்புள்ளியாய் அமைகின்றன.
  தன்னை உணர்தலும், தன் வாழ்வை மிக அழகாக வாழ்வதையும் ஜென் கவிதைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கருஞ்சிலையின் ஓரத்தில் கற்பூர வெளிச்சம் படும்கணத்தில் அந்தச் சிற்பம் எவ்வளவு அழகாக இருக்குமோ, அதேபோல ஜென் கவிதைகளின் சில அபூர்வ வரிகள் அக்கவிதை தரும் முழு அனுபவத்தைத் தரிசிக்க வைக்கின்றன.
  திறந்த கதவைத் தன் மாயக்கரங்களால் அறைந்து சாத்தி மூடிவிடுகிற காற்றைப்போல, சுக அனுபவத்தையும், அதிர்வனுபவத்தையும் ஜென் கவிதைகள் ஒருசேரத் தருகின்றன. கால் நனைக்கப் பயப்படும் குழந்தையின் காலுக்குக் கீழே தானே வலியச் சென்று மெதுவாகப் பரவுகிற பண்பட்ட கடல்போல, அனுபவ முரணால் ஒன்றுசேர மறுக்கும் வாசகர் மனதில் மெல்லொலி எழுப்பி ஜென் கவிதைகள் மெல்ல நுழைகின்றன. மெளனத்திலும், தனிமையிலும் ஆழ்ந்த பொருள் உண்டு என்று ஜென் கவிதைகள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. ஒரு வாசலைக் காட்டி இன்னும்பிற வாசல்களைத் திறந்து பயணிக்க ஜென் வழிகாட்டுகிறது என்றார் அவர். 
  பாளையங்கோட்டை சைவ சபையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முருகன் வரவேற்றார். சுரண்டை அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ரமேஷ் நாட்டுப்புறப் பாடல் பாடினார்.
  பேராசிரியர் மேலும் சிவசு, முதல் அமர்வுக்குத் தலைமை வகித்து, ஹெப்சிபா நாவல்கள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், தமிழ்ப் பெண் படைப்பாளர்களில் ஹெப்சிபா ஜேசுதாசன் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்கிறார். அவர் படைத்த பாத்திரங்கள் வெகுஇயல்பானவை, வெகு அழுத்தமானவை. அவர் எழுதிய நான்கு நாவல்களையும் தொல்காப்பியத்தின் துணைகொண்டு ஆராயலாம் என்றார்.
  சுவடி நூல் வெளியீட்டு விழா: நிகழ்ச்சியில், சுவடியியல் ஆய்வாளரான பேராசிரியர் வே. கட்டளை கைலாசம் பதிப்பித்துள்ள அரிய சுவடிப் பதிப்பு "முருகர் ஒயில்க் கும்மி ஓலைச்சுவடி' எனும் நூல் வெளியிடப்பட்டது. மேலும் சிவசு நூலை வெளியிட, திருநெல்வேலி பைந்தமிழ் மன்றச் செயலாளரும், வரலாற்று அறிஞருமான செ. திவான், பேராசிரியர் செளந்தர மகாதேவன் மற்றும் சங்கரன்கோவில் பி.எம்.டி. கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் வ. ஹரிஹரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 
  திருநெல்வேலி அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சித் தலைவர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், எழுத்தாளர்கள் புலமி, தீன், கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ. சத்தியமூர்த்தி, நிலா இலக்கிய வட்டப் பொறுப்பாளர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இலக்கிய அமைப்பின் தலைவர் பேராசிரியர் வே. கட்டளை கைலாசம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai