திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில்ரூ.1.5 கோடியில் கால்நடை தீவன உற்பத்தி அலகு விரிவாக்கம்ஏ.வி.பெருமாள்

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கால்நடை தீவன உற்பத்தி அலகு ரூ.1.5 கோடியில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கால்நடை தீவன உற்பத்தி அலகு ரூ.1.5 கோடியில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி பகுதியில் 140 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகம். இங்கு கால்நடை மருத்துவக் கல்லூரி, மாதிரிப் பண்ணை, மருத்துவமனை வளாகம்  உள்ளிட்ட 17 துறைகள் செயல்பட்டு வருகின்றன.  தென்மாவட்ட மக்களுக்கு ஆடு, மாடு, கோழி வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்குள்ள கால்நடை மாதிரிப் பண்ணையை பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டுச் செல்கிறார்கள்.
இங்கு செயல்பட்டு வரும் மருத்துவமனையில் கால்நடைகள், நாய்கள், குதிரைகள், யானைகள் உள்ளிட்டவற்றுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் தங்களின் கால்நடைகள், செல்லப்பிராணிகளோடு இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள்.
இங்குள்ள கால்நடை உணவியல் துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாது உப்புக் கலவை தயாரிக்கப்படுகிறது. இந்த தாது உப்புக் கலவை கால்நடை பராமரிப்புத் துறைக்கும்,  தென் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தாது உப்புக் கலவையை கால்நடை பராமரிப்புத் துறை கொள்முதல் செய்து தென்மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. கடந்த ஜூலையில் கேரளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோதுகூட, இங்கிருந்து 2 டன் தாது உப்புக் கலவை அனுப்பப்பட்டது.
அடர் தீவனம் தயாரிப்பு: தாது உப்புக் கலவை விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, இப்போது கால்நடைத் தீவன உற்பத்தி அலகு நிறுவப்பட்டு கறவை மாடுகள், ஆடுகள், பன்றிகள், கோழிகளுக்குத் தேவையான அடர் தீவனம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
சந்தைகளில் கிடைக்கும் அடர் தீவனங்களோடு ஒப்பிடுகையில் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தயாராகும் அடர் தீவனங்கள் தரமானதாகவும், அதேநேரத்தில் விலை குறைவாகவும் இருப்பதால் விவசாயிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கிறார்கள். மேலும், அபிஷேகப்பட்டியில் உள்ள திருநெல்வேலி அரசு கால்நடை பண்ணை, சாத்தூர் ஆட்டுப் பண்ணை ஆகியவற்றுக்கும் இங்கிருந்தே அடர் தீவனம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அடர் தீவன உற்பத்தி அலகை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு விரைவில் தயார் செய்யப்பட்டு விரிவாக்கப் பணிகள் தொடங்கவுள்ளன.
5 ஏக்கர் பரப்பளவில்... இதுதொடர்பாக திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, கால்நடை உணவியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் செல்லப்பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: 
கல்லூரி வளாகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் கால்நடைகளுக்கான அடர் தீவன உற்பத்தி அலகின் மூலம் மாதந்தோறும் 50 டன் அடர் தீவனம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அடர் தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விரிவாக்கப் பணிகளுக்கான ரூ.1.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 லட்சம் செலவில் குச்சி மற்றும் குருணை அடர் தீவனம் தயாரிக்கும் இயந்திரமும், ரூ.40 லட்சத்தில் அடர் தீவனங்களை சேமித்து வைப்பதற்கான சேமிப்புக் கிடங்கும், ரூ.40 லட்சம் செலவில் முழு தீவனம் தயாரிப்பதற்கான இயந்திரமும் நிறுவப்படும்.
முழு தீவனம் என்பது  புற்கள், அடர் தீவனம் ஆகிய இரண்டையும் அரைத்து காயவைத்து தயாரிப்பதாகும். இந்த தீவனத்தை கால்நடைகளுக்கு கொடுக்கும்போது, புற்கள், அடர் தீவனம் என தனியாகப் பிரித்துக் கொடுக்க வேண்டியதில்லை. 
பெரிய பண்ணைகளில் முழு தீவனங்களே பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர தீவனக் கட்டிகளைத் தயாரிக்கும் இயந்திரமும் நிறுவப்படவுள்ளது. வெள்ள பாதிப்பு போன்றவை ஏற்படுகிறபோது, மாடுகளுக்கு தீவனக் கட்டிகளை வழங்கலாம்.
பசுந்தீவன விதை உற்பத்தி: பசுந்தீவன உற்பத்தி செய்யக்கூடிய விதைக் கரனைகளுக்கு தென் மாவட்டங்களில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் நாமக்கள் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தே விதைக் கரனைகளை கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு பசுந்தீவன விதைக் கரனை உற்பத்தி அலகையும் நிறுவவிருக்கிறோம். இதன்மூலம் கோ-4, கோ-5 புற்களின் விதைக் கரனைகள், தீவனச் சோளம், வேலிமசால் ஆகியவற்றின் விதைக் கரனைகள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். 
கால்நடைத் தீவன உற்பத்தி அலகின் விரிவாக்கப் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கிவிடும். இந்தப் பணிகள் முடிந்தவுடன் மாதத்துக்கு 100 டன் அடர் தீவனம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். 
மேலும், மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கவுள்ள விவசாயிகளுக்கு பசுந்தீவன விதைக் கரனை வழங்குவதற்கு எங்கள் கல்லூரியே தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

மக்களின் வரவேற்பைப் பெற்ற தீவன பரிசோதனை ஆய்வுக்கூடம்
கல்லூரி வளாகத்தில் கால்நடைத் தீவன பரிசோதனைக் கூடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கால்நடைத் தீவன தயாரிப்பு நிறுவனங்கள் அடர் தீவனங்களை தயார் செய்வதற்கு பல்வேறு தானியங்கள் உள்ளிட்டவற்றை கலந்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கின்றன. அதில் கலந்துள்ள தானியங்களின் விகிதம் ஆய்வுக்கூடத்தில் சோதிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதேபோல் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு அடர் தீவனங்களை கொடுக்கிறபோது ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டால், அந்த தீவனங்களை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி, அதில் ஏதாவது நச்சுத் தன்மை உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். இப்போது அடர் தீவனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமன்றி, ஏராளமான பொதுமக்களும் இந்த ஆய்வுக் கூடத்திற்கு அடர் தீவனங்களை அனுப்பி பரிசோதனை செய்து கொள்கிறார்கள். மாதத்திற்கு 30 மாதிரிகள் வரை கல்லூரி ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படுவதாக கால்நடை உணவியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com