தீபாவளி: நெல்லையில் 157 டன் பட்டாசு குப்பைகள்! கடந்த ஆண்டைவிட குறைவு

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களில் மட்டும் சுமார் 157 டன் பட்டாசு குப்பைகள்

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களில் மட்டும் சுமார் 157 டன் பட்டாசு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. பட்டாசு வெடிக்க நீதிமன்றம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 10 டன் குப்பைகள் குறைந்துள்ளன.
இந்தியா முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் முக்கிய அங்கம்வகிக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் தங்களது வயதுக்குத் தகுந்த பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வழக்கமாக தீபாவளி முடிந்த சில நாள்களுக்கு அனைத்துப் பகுதிகளிலும் பட்டாசு குப்பைகள் அதிகரிப்பது வழக்கம். அவற்றை அப்புறப்படுத்துவது உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பெரும் சுமையாகும். அந்தவகையில், நிகழாண்டில் திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் மட்டும் சுமார் 157 டன் பட்டாசு குப்பைகள் கடந்த இரு நாள்களாக அகற்றப்பட்டுள்ளதாம்.
இதுதொடர்பாக மாநகர நல அலுவலர் சதீஷ் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 120 முதல் 145 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, ராமையன்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்கில் அழிக்கப்படும். தீபாவளி நேரத்தில் பட்டாசு குப்பைகள் அதிகம் சேரும். அவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 1083 துப்புரவுப் பணியாளர்கள், 517 ஒப்பந்தப் பணியாளர்கள், 32 தூய்மைக் காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மூலம் செவ்வாய், புதன்கிழமைகளில் மட்டும் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சராசரியாக 157 டன் பட்டாசு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் தீபாவளி முடிந்த இருநாள்களில் சுமார் 165 டன் பட்டாசு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன. உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிக்க விதித்திருந்த கட்டுப்பாடுகள் காரணமாக பட்டாசு குப்பைகள் சுமார் 10 டன் வரை குறைந்துள்ளன என்றார்.
இதுதொடர்பாக துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கூறியது: தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலங்களில் குப்பைகள் சேகரிப்பதில் கூடுதல் சுமை ஏற்படுவது வழக்கம். வழக்கமாக தீபாவளி முடிந்ததும் பட்டாசுகளால் காகிதக் குப்பைகள் அதிகம் சேகரிக்க வேண்டியிருக்கும். இந்த ஆண்டில் தொகுப்பு பட்டாசுகள் அதிகம் வெடிக்கப்பட்டுள்ளதால், பாக்ஸ்கள் வடிவில் மொத்தமான அட்டைகளை அதிகம் சேகரித்தோம். ஆனால், பட்டாசு குப்பைகளை சிலர் கழிவுநீர் ஓடைகளில் வீசுகிறார்கள். இது எங்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. கழிவுநீரில் இறங்கி பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்த கூடுதல் நேரம் பிடிக்கிறது. எனவே, பொதுமக்கள் பண்டிகைக் காலங்களிலும் குப்பைத்தொட்டிகளைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com