நெல்லை மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் விநியோகம்

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, நதியில் நீராட வரும் பக்தர்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, நதியில் நீராட வரும் பக்தர்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
தாமிரவருணி மஹா புஷ்கர விழா இம் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநகர பகுதிகளில் உள்ள படித்துறைகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வருகிறார்கள். அவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் (பொ) ஏ. நாராயணன் நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின்பேரில் தாமிரவருணி மஹா புஷ்கரத்தையொட்டி மேலநத்தம், தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை, மணிமூர்த்தீஸ்வரம், வண்ணார்பேட்டை படித்துறைகளில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குடிநீர்த் தொட்டிகள், உடை மாற்றும் அறைகள், வலைத்தொட்டிகள்,  பக்தர்கள் பயன்படுத்திய தேவையற்ற பொருள்களை போடுவதற்கு குப்பைத் தொட்டிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புஷ்கர விழாவில் நீராட வரும் பக்தர்களுக்கு மாநகராட்சி சார்பில் மா, புளி, சப்போட்டா, வேம்பு, கொய்யா, பிச்சி, மல்லி, ரோஜா உள்ளிட்ட மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை 300 மரக்கன்றுகளும், சனிக்கிழமை 400 மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன. இதுதவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. பாலித்தீன் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கப்பட்டன.
100 சமையல் கலைஞர்கள்: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள படித்துறைகளில் தாமிரவருணி மஹா புஷ்கரத்தையொட்டி நீராட வரும் பக்தர்களுக்கு சிருங்கேரி சாரதா மடம், ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் இம் மாதம் 22 ஆம் தேதி வரை தினமும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு உணவு தயாரிக்கும் பணி சங்கீத சபாவில் நடைபெறுகிறது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70 சமையல் கலைஞர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து பணி செய்து வருகிறார்கள். தினைப்பொங்கல், பச்சரிசி பொங்கல், ரவை பொங்கல், மல்லி பொங்கல், சாம்பார் சாதம், பருப்பு சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம், கத்தரி சாதம், கேரட் சாதம் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com