பள்ளிகளுக்கு பராமரிப்பு  மானியங்களை நிறுத்தக் கூடாது: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியங்களை நிறுத்தக் கூடாது என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியங்களை நிறுத்தக் கூடாது என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பராமரிப்பு நிதி ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டில் 15-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ. 25 ஆயிரமும், 101-250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ. 50 ஆயிரமும், 251-1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ. 75 ஆயிரமும், 1001-க்கு மேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ.1 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
30-04-2019 ஆம் தேதிக்குள் இந்தத் தொகைகளுக்கான செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்க வேண்டும் எனவும் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சுமார் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
மறுபரிசீலனை தேவை: 
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் செ. பால்ராஜ் கூறுகையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் 2018-19 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.15-க்கும் குறைவாக மாணவர்கள் உள்ளதாகக் கூறி, சுமார் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு மானியம் விடுவிக்கப்படவில்லையென தெரியவந்துள்ளது. இம்மாவட்டத்தில் 1492 ஆரம்பப் பள்ளிகளும், 419 நடுநிலைப் பள்ளிகளும் என மொத்தம் 1911 பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 15 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். அரசின் அறிவிப்பைப் பார்க்கும்போது அப்பள்ளி மாணவர்களின் கற்றலில் பாதிப்பு உருவாகும் அபாயம் உள்ளது. ஆகவே, இந்த நிதிஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்வது மிகவும் அவசியம் என்றார்.
இதுகுறித்து ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பி. ராஜ்குமார் கூறியது:
கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள, கல்வியறிவு பெறாத பெற்றோர்களின் குழந்தைகளே பெரும்பாலும் பயின்று வருகிறார்கள். அரசின் புதிய உத்தரவால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ள பள்ளி பராமரிப்பு நிதியை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு உடனடியாக விடுவித்து கல்விப் பணி மேம்பட உதவவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com