தாமிரவருணியைப் பாதுகாக்க மாணவர்களின் பங்களிப்பு அவசியம்'

தாமிரவருணி நதியை மாசுபடாமல் பாதுகாக்க மாணவர்களின் பங்களிப்பு அவசியம் என்றார் திருநெல்வேலி கோட்டாட்சியர் இல. மைதிலி.


தாமிரவருணி நதியை மாசுபடாமல் பாதுகாக்க மாணவர்களின் பங்களிப்பு அவசியம் என்றார் திருநெல்வேலி கோட்டாட்சியர் இல. மைதிலி.
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், முஸ்லிம் கல்வி கமிட்டி சார்பில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. வேட்டி, துண்டு, படுக்கை விரிப்பு, 5 கிலோ அரிசி ஆகியன அடங்கிய 300 பொட்டலங்கள் பத்தனம்திட்டா மாவட்ட மக்களுக்கு வழங்கும் வகையில் தயார்செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நிவாரணப் பொருள்களை மாணவர்கள் திருநெல்வேலி கோட்டாட்சியர் இல. மைதிலியிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் பேசியது:
கேரள மாநில மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாணவர்கள் உதவி செய்திருப்பது பாராட்டுக்குரியது. மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். வற்றாத ஜீவ நதியான தாமிரவருணியை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.
பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வேண்டும். துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தங்களது வீட்டில் இருந்து இந்த மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இயற்கையை நேசிப்பதோடு, பாதுகாப்பதும் அவசியம் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் எம்.ஏ.எஸ். முகம்மதுஅபூபக்கர் தலைமை வகித்தார். முஸ்லிம் கல்வி கமிட்டி தலைவர் எல்.கே.எஸ். மீரான்முகைதீன், பொருளாளர் டி.எஸ்.எம். ஓ. மஜித், துணைத் தலைவர் முஹம்மதுஅலிஅக்பர், கல்வி கமிட்டி உறுப்பினர் சலீம், பள்ளித் தலைமையாசிரியர் ஷேக்முகம்மது, கோல்டன் ஜூப்ளி பள்ளி முதல்வர் ஜெசிந்தா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com