வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: ஏத்தன் வாழைத்தார் விலை தொடர்ந்து சரிவு

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக களக்காடு வட்டாரத்தில் ஏத்தன் ரக வாழைத்தார் விலை கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக களக்காடு வட்டாரத்தில் ஏத்தன் ரக வாழைத்தார் விலை கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது.
களக்காடு வட்டாரத்தில் ஆண்டுதோறும் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வாழை பயிரிடப்படுகிறது. கேரள சந்தைகளில் அதிக வரவேற்பு பெறும் ஏத்தன் ரக வாழை இங்கு அதிகளவில் பயிரிடப்படும். மே, ஜூன் மாதங்களில் பயிர் செய்யப்படும் வாழை, நல்ல முறையில் பருவம் செய்தால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்பட்டுவிடும்.  கடந்த ஆண்டு வாழைத்தாரின் விலை கிலோ ரூ.25-க்கும் அதிகமாக இருந்ததால் விவசாயிகளுக்கு நல்ல பலனைத் தந்தது. நிகழாண்டு தொடக்கத்தில் ரூ.25-க்கும் மேல் இருந்த விலை, படிப்படியாக குறைந்து வெள்ளிக்கிழமை (ஏப்.12) கிலோ ரூ.13 என்றஅளவில் மிகவும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 
தேக்கம்: மார்ச் 20ஆம் தேதிக்குப் பின்னர் விலை படிப்படியாக குறையத் தொடங்கியதால் விவசாயிகள் விலை அதிகரிக்கும் என்ற நிலையில், அறுவடையை நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் வாழைத்தார் தேக்கம் அதிகரித்தது.
இந்நிலையில், விலையும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்ததால் விவசாயிகள் தற்போது கிடைக்கும் விலைக்கு, மேலும் குறைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஒட்டு மொத்தமாக அறுவடை செய்யத் தொடங்கினர். வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு காரணமாகவும், பாசனக் குளங்கள் வறண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் வாழைப்பயிர் கருகத் தொடங்கியுள்ளது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் அறுவடையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 
தற்போதுள்ள நிலையில், வாழை காற்றில் சாய்ந்துவிடாமல் இருக்க கொடுக்கப்படும் சவுக்கு கம்பு விலை ரூ.70-ஐ தவிர்த்து, சராசரியாக ஒரு வாழைக்கு விவசாயிகள் ரூ.80 முதல் ரூ.100 வரை செலவு செய்துள்ளனர்.  குத்தகை விவசாயிகள் வாழைத்தார் அறுவடை மூலம் செலவு செய்த தொகை கூட கிடைக்கவில்லை என புலம்புகின்றனர். விலை வீழ்ச்சியால் ஓராண்டு செய்த உழைப்பு வீணாகியுள்ளது என்றார் விவசாயி முத்துகிருஷ்ணன்.
ஏப்ரல் மாத இறுதிக்குள் வாழைத்தார் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டிவிடும். அதன் பின்னரே விலை உயர வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 
வாழை விவசாயத்தில் விலை வீழ்ச்சியில் இருந்து தீர்வு கிடைக்க, மத்திய, மாநில அரசுகள் சந்தை, கிடங்கு வசதிகளை அமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்றினால் மட்டுமே வருங்காலங்களில் வாழை விவசாயம் நீடித்து நிலைத்து நிற்கும் என்கின்றனர் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com