பெண்களால் நிர்வகிக்கப்படும் 520 வாக்குச்சாவடி மையங்கள்: ஆட்சியர் தகவல்

மக்களவைத் தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் 520 வாக்குச்சாவடி மையங்களை பெண் ஊழியர்கள்

மக்களவைத் தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் 520 வாக்குச்சாவடி மையங்களை பெண் ஊழியர்கள்  மட்டுமே நிர்வகிக்க உள்ளனர் என்றார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:  தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்.18)  நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக்  கொண்டு செல்வதற்காக 267 சிறப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த வாகனங்களை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து  இருந்து கண்காணிக்க ஏதுவாக  ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி நடைபெறுகிறது. அடுத்த மூன்று நாள்களுக்கு இந்த வாகனங்கள் கண்காணிப்பில் இருக்கும். காவல் துறையினர் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இம் மாவட்டத்தில் 520 வாக்குப்பதிவு மையங்கள் பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட உள்ளது.  ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் தலா 4 மாதிரி வாக்குப்பதிவு மையங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,300 வாக்குச்சாவடி மையங்களில் வெப்கேமரா இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்  725 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு 714 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கு  673 இயந்திரங்களும் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் வட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டைகளில் சிறு சிறு தவறுகள் இருந்தாலும் அச்சப்படத் தேவையில்லை. வாக்காளரின் பெயர் வாக்குப்பதிவு மைய பட்டியலில் இருந்தால் வாக்களிக்க முடியும் என்றார் அவர்.
செல்லிடப்பேசிகளுக்கு தடை: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே.அருண்சக்திகுமார் கூறியது:  திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 106 தேர்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன.  திமுக கூட்டணி கட்சிகள் மீது 26, அதிமுக கூட்டணி கட்சிகள் மீது 42, அமமுக மீது 17, நாம் தமிழர் கட்சி மீது 1 வழக்கு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நாளில் கட்சியினர் வாக்குச் சீட்டு கொடுப்பதற்காக அமைக்கப்படும் தற்காலிக மையங்கள், வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். இதில் குறிப்பிட்ட அளவில் கட்சியின் விளம்பர பதாகையை வைக்கலாம். அப் பதாகையில் வேட்பாளர் பெயர், சின்னம் மட்டும் இருக்கலாம். 1 டேபிள், 2 சேர் அனுமதிக்கப்படும். வாக்காளர்களின் வாகனங்களை வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு முன்பாக நிறுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வேட்பாளர் மற்றும் முகவரின் வாகனம் 100 மீட்டர் வரை அனுமதிக்கப்படும். இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் வாக்குச்சாவடி எல்லை வரை அனுமதி அளிக்கப்படும். தேர்தல் அலுவலர்கள் தவிர மற்றவர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்லிடப்பேசிகளைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புக்காக 5,043 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் 377 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com