நெல்லை தொகுதியில் தயார் நிலையில் 1,783 வாக்குச்சாவடிகள்

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக திருநெல்வேலி தொகுதியில் 1,783 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக திருநெல்வேலி தொகுதியில் 1,783 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. 
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 6 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 46,212  வாக்காளர்கள் உள்ளனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் பால் மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் சா.ஞானதிரவியம், அமமுக சார்பில் எஸ்.மைக்கேல் ராயப்பன், நாம் தமிழர் கட்சி சார்பில் பா.சத்யா,  மக்கள் நீதி மய்யம் சார்பில் வெண்ணிமலை உள்பட மொத்தம் 26 பேர் களத்தில் உள்ளனர். 26 பேர் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா இரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. 
1,783 வாக்குச் சாவடிகள்: திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள், திருநெல்வேலி-308,  அம்பாசமுத்திரம்- 294,  பாளையங்கோட்டை -268, நான்குனேரி-299,  ராதாபுரம்-306 என மொத்தம் 1,783 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் தேர்தல் பணிக்கான 36 வகையான உபகரணங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
20 சதவீதம் கூடுதல் இயந்திரங்கள்: இது தொடர்பாக  தேர்தல் பிரிவு அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றில் பழுது ஏற்பட்டால், அதனால் வாக்குப் பதிவு தடைபடாமல் இருப்பதற்காக கூடுதலாக 20 சதவீத இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பலத்த பாதுகாப்பு: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சாம்சன் கூறியதாவது: திருநெல்வேலி மாநகரில் 420 வாக்குச்சாவடிகள் உள்ளன.  அதில் 56 வாக்குச்சாவடிகள் பதற்றமிக்கவையாக கண்டறியப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 120 பேர், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை-72, மத்திய ரிசர்வ் போலீஸ்-92, மாநகர ஆயுதப்படை-420, மாநகர போலீஸார்-600,  ஊர்க்காவல்படை-250 என மொத்தம் 1,434 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடவுள்ளனர். இதேபோல் மாநகர காவல் ஆணையர், இரு துணை காவல் ஆணையர்கள், 8 உதவி காவல் ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 22 பேர் தலைமையில் அதிரடிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். 
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 கம்பெனி துணை ராணுவத்தினர், 330 முன்னாள் படை வீரர்கள், 2,500 போலீஸார், மத்திய ஆயுதப் படை வீரர்கள்  என மொத்தம் 5,100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமிக்க வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப் படை போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 1,300-க்கும் மேற்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. அந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் வாக்குப்பதிவின்போது வெப் ஸ்ட்ரீமிங் கேமராக்கள் மூலம் விடியோ எடுக்கப்படும்.
வாக்குப் பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.

"சேலஞ்ச்' வாக்கு
வாக்களிக்க வருபவரை இவர் வாக்காளர் இல்லை என, வாக்குச்சாவடி முகவர் மறுப்பு தெரிவித்தால், அது "சேலஞ்ச்' வாக்கு ஆகும்.  வாக்களிக்க வருபவரின் அடையாளம் குறித்து, வாக்குச்சாவடி முகவர் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, வாக்குச்சாவடி அலுவலர் முழு விசாரணை நடத்த வேண்டும். விசாரணை முடிவில் எதிர்ப்பு நிரூபிக்கப்படவில்லை என்றால், அந்த வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்கலாம். எதிர்ப்பு நிரூபிக்கப்பட்டால், வாக்களிக்க வந்தவரை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஏதேனும் ஒரு வாக்காளரின் வாக்கை, ஏற்கெனவே யாரேனும் பதிவு செய்துவிட்டதாக தெரிந்தால், வாக்களிக்க வந்தவரின் அடையாளம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து,  உரிய வாக்குச்சீட்டு (பேலட் பேப்பர்) வழங்கி, வாக்களிக்க அனுமதிக்கலாம். இவரை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற வாக்குகளை தனியே கணக்கு வைத்து, தனி உறையில் சீல் வைத்து ஒப்படைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com