விஜயநாராயணம் அருகே கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை: ஏழரை பவுன் தங்கச் சங்கிலி திருட்டு
By DIN | Published On : 21st April 2019 03:17 AM | Last Updated : 21st April 2019 03:17 AM | அ+அ அ- |

விஜயநாராயணம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம மனிதர்கள், அவர் அணிந்திருந்த ஏழரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
விஜயநாராயணம் அருகேயுள்ள வெங்கட்ராயபுரத்தைச் சேர்ந்த குருநாதன் மனைவி வசந்தா (65). குருநாதன் இறந்துவிட்டார். இவரது மகன் வெளியூரில் பணியாற்றி வருகிறார். வசந்தா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவர், எப்போதும் வீட்டின் முன்புள்ள வராண்டாவில் படுத்துத் தூங்குவது வழக்கம். இந்நிலையில், வராண்டாவில் படுத்திருந்த வசந்தா சனிக்கிழமை காலை எழுந்திருக்கவில்லையாம். இதையடுத்து, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் வசந்தா படுத்திருந்த கட்டில் அருகே சென்று பார்த்தபோது, அவர் துணியால் முகத்தை மூடி இறுக்கிக் கட்டிய நிலையில் இறந்துகிடந்தாராம். மேலும், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை காணவில்லையாம்.
இதுகுறித்து விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், வசந்தா அணிந்திருந்த தங்கச் சங்கிலிக்கு ஆசைப்பட்டு அவரை துணியால் முகத்தை மூடி கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.