முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
சங்கரன்கோவில் ஆடித் தவசு திருவிழா: நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள்: ஆணையர்
By DIN | Published On : 04th August 2019 01:32 AM | Last Updated : 04th August 2019 01:32 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் ஆடித் தவசு திருவிழாவையொட்டி நகராட்சி சார்பில் பக்தர்களுக்குத் தேவையான பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் முகைதீன் அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித் தவசு திருவிழா ஆக. 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஆக. 14ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தவசு திருவிழாவையொட்டி அமைக்கப்படவுள்ள 4 தற்காலிக பேருந்து நிலையங்களில் குடிநீர், தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
திருவிழாவையொட்டி சிறப்புப் பணி மேற்கொள்வதற்காக அருகில் உள்ள நகராட்சிகளான தென்காசி, புளியங்குடி, கோவில்பட்டி, ராஜபாளையம் ஆகிய 4 நகராட்சிகளிலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய குடிநீர்த் தொட்டி லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 4 துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் 40 துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சிறப்பு துப்புரவுப் பணி மேற்கொண்டு சுகாதாரம் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, திருக்கோயிலைச் சுற்றி நான்கு ரதவீதிகளிலும் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, பக்தர்களுக்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினரால் நிறுவப்படும் தண்ணீர் பந்தல்கள், அன்னதானத்துக்கு இலவசமாக நகராட்சி மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
அன்னதானம் வழங்குவோர் நகராட்சியில் உரிய விண்ணப்பம் சமர்ப்பித்து, அதன்பின்னர் உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்னரே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் நடத்தும் விவரம் குறித்து காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவின்படி, தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டினை அனைத்துக் கடைகளிலும் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.