வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு குருணை வடிவ தடுப்பு மருந்து அறிமுகம்

நாட்டுக் கோழிகளை பாதிக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு குருணை வடிவ தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


நாட்டுக் கோழிகளை பாதிக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு குருணை வடிவ தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இந்த மருந்து குறித்த முதல் கட்ட சோதனை ஏற்கெனவே நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தி சோதனை அடிப்படையில் கோழிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 
இந்தியக் கிராமங்களின் பொருளாதார முன்னேற்றத்தில் நாட்டுக் கோழிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகளின் குடும்ப வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, நடுத்தர குடும்பங்களின் புரதத் தேவையையும் பூர்த்தி செய்கிறது நாட்டுக்கோழி. 80 சதவீத கிராம மக்கள் நாட்டுக் கோழி வளர்ப்பை வேளாண்மையுடன் கூடிய உபதொழிலாக பயன்படுத்தி வருகின்றனர். 
ஆனால் சில நேரங்களில் நாட்டுக் கோழிகளை பல்வேறு தொற்று நோய்கள் தாக்கி, பெருத்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன. பண்ணைக் கோழிகளுக்கு வரக்கூடிய அனைத்து நோய்களும் நாட்டுக் கோழிகளையும் தாக்கக்கூடியதாகும். ஆனால், நம் நாட்டுக் கோழிகளில் காணப்படும் நோய் எதிர்ப்புத் திறனால் அனைத்துவிதமான நோய்களாலும் அவை பாதிக்கப்படுவதில்லை. எனினும் நச்சுயிரி தொற்று நோயான வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்கி 100 சதவீதம் வரை நாட்டுக்கோழிகளில் இறப்பு  ஏற்படுகிறது. 
நோய்க் காரணி: ராணிகெட் என்றழைக்கப்படும் வெள்ளைக் கழிச்சல் நோயானது ஏவியன் பேராமிக்ஸோ வைரஸ் எனப்படும் நச்சுயிரியினால் ஏற்படுகிறது. இந்த நோயானது  வீரியமுள்ள உள்ளுறுப்புகளை தாக்கும் வகை, வீரியமுள்ள நரம்பு மண்டலத்தை தாக்கும் வகை, மத்திய வீரிய வகை, மித வீரிய வகை, நோய் அறிகுறிகளற்ற வகை என 5 வகைகளில் கோழிகளை தாக்குகிறது. இட நெருக்கடி, அதிக கோழிகளை ஒரே இடத்தில் வளர்த்தல், தரமற்ற தடுப்பூசிகள், தடுப்பூசி முறைகள், தொற்றுநோய் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காததால் இந்த நோய் ஏற்படுகிறது.
அறிகுறிகள்: இந்த நோய் கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிக அளவில் ஏற்பட்டாலும், ஆண்டு முழுவதும் நாட்டுக் கோழிகளை கடுமையாகப் பாதிக்கிறது. ராணிகெட் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகள் வெள்ளையாகக் கழிவதோடு, கொக்கு போன்று குறுகிக் கொண்டு தீவனம் உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருக்கும்.
 குஞ்சுகளின் கண்களில் நீர் கோத்தும், நரம்பு பாதிக்கப்பட்ட கோழிகள் கால்களை இழுத்துக் கொண்டும், கழுத்தைத் திருகிக் கொண்டும், தீவனம் உண்ணாமலும் இருந்து 2 அல்லது 3 நாள்களில் இறந்துவிடும்.  கிராமங்களில் ஒரு வீட்டுக் கோழிகளுக்கு வரும் நோயானது, பின்னர் அருகில் உள்ள வீட்டின் கோழிகளுக்கும் வேகமாக பரவி, கிராமம் முழுவதும் உள்ள கோழிகளில் இறப்பை ஏற்படுத்தி விடும். 
தடுப்பு முறைகள்: ராணிகெட் நோய் வந்த பிறகு மருத்துவம் செய்வதில் எந்தப் பலனும் இல்லை. அந்நோய் வருவதற்கு முன்பாக தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த வழி. இந்த நோயைத் தடுக்க, குஞ்சு பொரித்த 5 முதல் 10 நாள்களுக்குள் ஆர்.டி.வி.எஃப். எனப்படும் தடுப்பூசி மருந்தைக் கண்ணில் சொட்டு மருந்தாக விட வேண்டும். அடுத்ததாக 30 முதல் 35 நாள்களுக்குள் ராணிகெட் லசோட்டோவை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். குஞ்சுகள் 8 வார வயதை எட்டியவுடன் ஆர்.டி.வி.கே. எனப்படும் தடுப்பூசியை போட வேண்டும். 
ஆனால் இந்த மருந்துகள் சுமார் 200 கோழிகளுக்கு கொடுக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படுவதாலும், மூன்று தவணையாக கொடுக்க வேண்டியிருப்பதாலும் அதற்கு சிறு விவசாயிகள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே, நாட்டுக் கோழிகளை வளர்க்கும் சிறு விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை மருத்துவர் ஜான் கிருபாகரன், குருணை வடிவ தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளார். அந்த மருந்து தொடர்பாக வரையறுக்கப்பட்ட கள ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
அதனடிப்படையில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் விரிவாக்கக் கல்வித் துறை மூலமாக நாட்டுக் கோழிகளை பாதிக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான குருணை வடிவ தடுப்பு மருந்து பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. 
இது தொடர்பாக திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விரிவாக்க கல்வித் துறை தலைவர் வெ.தனசீலன், இணைப் பேராசிரியர் சே.செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதல்வர் (பொறுப்பு) ஜான்சன் ராஜேஸ்வர் தலைமையில் முதலில் சொக்கட்டான்தோப்பு பகுதியில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக வரும் 6-ஆம் தேதி களக்குடியிலும், 8-ஆம் தேதி  தெற்குப்பட்டியிலும், பின்னர்  துலுக்கர்குளத்திலும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. 
இந்த முகாமின்போது 50 நபர்களின் கோழிகளுக்கு குருணை வடிவ தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. அதில் 10 சதவீத கோழிகளில் இருந்து மருந்து கொடுப்பதற்கு முன்பாக ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது. தடுப்பு  மருந்து கொடுத்து 21 நாள்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கோழிகளிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்படுகிறது. அதன்மூலம் எந்தளவிற்கு கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளது என்பதை கண்டறிகிறோம். குருணை வடிவ தடுப்பு மருந்து விரைவில் வெளிச்சந்தைகளுக்கு வரவிருக்கிறது என்றனர்.
குருணை வடிவ தடுப்பு மருந்து
லாக்டோஸ் ஸ்டார்ச் குருணைகள் ராணிகெட் நோய் டி58 வகை நச்சுயிரியை உபயோகித்து தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பு மருந்தை கோழிகளில் காணப்படும் ராணிகெட் நோயை  தடுக்க பயன்படுத்தலாம். முக்கியமாக இந்த தடுப்பு மருந்து புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பு மருந்தை கோழிகளுக்கு தீவனம் அளிப்பது போன்று அளிக்கலாம்.  காலையில் தடுப்பு மருந்தை அளிக்கும்போது முன்தினம் இரவு தீவனம் அளிக்காமல் இருந்தால் நல்லது.  தடுப்பு மருந்தை ஒரு தட்டிலோ அல்லது காகிதத்திலோ பரப்பி வைத்தால் கோழிகள் உணவு உண்பதைப் போன்று எடுத்துக் கொள்ளும்.  மாற்றுமுறையாக ஒவ்வொரு கோழியையும் பிடித்து அவற்றின் வாயில் ஒரு குருணை அளிக்கலாம்.  ஒரு கோழிக்கு குறைந்தபட்சம் ஒரு குருணை அளிக்கலாம். அதற்கு மேல் எடுத்தாலும் பக்கவிளைவு ஏதுமில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com