தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு அநீதி: இரா.முத்தரசன்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்காமல், தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்காமல், தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மக்களவை, மாநிலங்களவை கூட்டத் தொடர்கள் நடைபெற்று வரும் வேளையில் எவ்வித விவாதங்களுமின்றி காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. அதற்கான காரணங்கள் தெரியாததால் மக்கள் அச்சநிலையில் உள்ளனர்.
நாட்டின் அமைதி, வளர்ச்சி, ஒற்றுமை ஆகியவற்றுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் ஆட்சி நடத்துவது மத்திய அரசின் கடமையாகும். ஒரு சட்டம் இயற்றும் போது அதனை நிலைக்குழுவுக்கு அனுப்பி விவாதித்து அமல்படுத்துவது மரபு. ஆனால், பாஜக ஆட்சியமைத்து பல மாதங்கள் ஆன பிறகும் நிலைக்குழு உருவாக்கப்படவில்லை. ஜனநாயகத்திற்கு விரோதமாக, பெரும்பான்மையைப் பயன்படுத்தி சட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமை சட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் போன்றவை நீர்த்துப் போக மத்திய அரசு சட்ட திருத்தம் செய்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள்,  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றை தனியார்மயமாக்கி சீர்குலைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவது சரியானதல்ல. தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக 40 வகையான  தொழிலாளர் நலச் சட்டங்களை 4 ஆக குறைத்துள்ளனர். இதை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
மாநில அரசுகளின் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் மறைமுகமாக குலக் கல்வி முறையை அமல்படுத்த முயற்சிக்கிறார்கள். பல்வேறு கட்ட தேர்வுகள், தகுதித் தேர்வுகளை உருவாக்கி சாமானியர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையை உருவாக்கி வருகிறார்கள்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் 2017ஆம் ஆண்டு  நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை மக்களுக்குத் தெரிவிக்காமல் தமிழக அரசு மூடி மறைத்துள்ளது. இந்தச் சூழலில் நிகழாண்டில் நீட் தேர்வு தோல்வியால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே,  தமிழக அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு வழங்கியதைப் போல தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசால் முடியும். ஆனால், அதனை செய்யாமல் தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழாண்டில் கடும் வறட்சி நிலவி வருகிறது. கார் பருவ சாகுபடியை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். குளங்கள் அனைத்தும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. ஆகவே, இம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். நான்குனேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு 1996 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை. அங்கு தொழிற்சாலைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் அணுக் கழிவுகளை அதே பகுதியில் சேமித்து வைப்பதை அரசு தவிர்க்க வேண்டும்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக  நிச்சயம் வெற்றி பெறும் என்றார் அவர்.
பேட்டியின்போது கட்சியின் மாவட்டச்செயலர் காசிவிஸ்வநாதன், மாதர் சங்க மாநில செயலர் பத்மாவதி, நிஷா சத்யன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com