பாளையங்கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்காமல் தூர்வாரும் பணி: விவசாயிகள் அதிருப்தி

பாளையங்கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்காமல் தூர்வாரும் பணி நடைபெறுவதால் விவசாயிகள்

பாளையங்கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்காமல் தூர்வாரும் பணி நடைபெறுவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேபோல பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள கால்வாய் கரைகளில் சிமென்ட் தளம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் கடை மடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி நீரைப் பெறும் 7 பாசனக் கால்வாய்கள் பாளையங்கால்வாயும் ஒன்றாகும்.  மேலச்செவல் அருகே உள்ள பழவூர் தடுப்பணையில் இருந்து தொடங்கி 43 கி.மீ. தொலைவு பாய்கிறது.  சுமார் 57 கிராமங்களில் உள்ள விளைநிலங்களின் பாசனத் தேவையைத் தீர்த்து வருகிறது. 
 மேலப்பாளையம் முதல் மூளிகுளம் வரை சுமார் 10 கி.மீ.க்கு அதிகமாக திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிக்குள் பாய்ந்து நிலத்தடி நீர்மட்டத்தையும் பெருக்கி வருகிறது.  பாளையங்கால்வாய் தண்ணீர் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் கால்வாயில் மட்டும் 162 மடைகள் உள்ளன.
கழிவுநீரால் ஆபத்து:  மேலப்பாளையம், குலவணிகர்புரம், முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை பகுதிகளில் வீட்டுக் கழிவுநீர் முதல் மருத்துவக் கழிவுகளும் கூட பாளையங்கால்வாயில் கலக்கின்றன. இதனால் பாசனநீர் நஞ்சாகும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. கழிவுநீர் கலப்பு மற்றும் வயல்களில் பயன்படுத்தும் ரசாயன உரம் போன்றவற்றால் அமலைச் செடிகளும் அதிகரித்துள்ளன.  
திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குள் பாளையங்கால்வாயில் குப்பைகள், கட்டடக் கழிவுகளைக் கொட்டுவது மிகவும் அதிகரித்துள்ளதாகவும், கழிப்பறை கழிவுகளும் கூட கால்வாயுடன் கலந்து விடப்படுகிறது எனவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
வறட்சியின் பிடியில் குளங்கள்: இதுகுறித்து பர்கிட்மா நகரத்தைச் சேர்ந்த விவசாயி கூறியது: பாளையங்கால்வாயை முறையாக பராமரிக்காததால் நீரோட்டத்தில் தடை ஏற்பட்டு வருகிறது. இக் கால்வாயின் கடைமடை பகுதிகளான அரியகுளம், ராஜாகுடியிருப்பு, நொச்சிக்குளம், சாணான்குளம், தோணித்துறை, அவினாப்பேரி, திருத்து, மருதூர், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்கள் வறட்சியின் பிடியிலேயே உள்ளதால் பல ஏக்கர் நிலங்களில் கார் சாகுபடி பணிகள் நடைபெறவில்லை. கால்நடைகளும் நீரின்றி தவித்து வருகின்றன.
 நிகழாண்டில் கோடை உழவு முடித்து உரம், விதை உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்துள்ளோம். ஒவ்வொரு விவசாயியும் ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரம் வரை செலவு செய்து வைத்துள்ளனர். ஆனால், மழை பொய்த்து போனதால் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது என்றனர்.
குடிமராமத்துக்கு அதிருப்தி: இதுகுறித்து பாளையங்கால்வாய் பாசன நீர் பெறும் விவசாயிகள் சிலர் கூறியது: பாளையங்கால்வாயில் இப்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீரோட்டத்தை சீராக்கும் வகையில் பொக்லைன் உதவியுடன் மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், கழிவுநீர் கலப்பதைத் தடுக்காமல் இப் பணி செய்யப்படுவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
 இதைத்தடுக்க பலமுறை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் அறிவுறுத்தியும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை இல்லை.  திமுக ஆட்சிக்காலத்தில் பாளையங்கால்வாயில் முழுவதுமாக கரைகள், தளம் ஆகியவற்றில் சிமென்ட் தளம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. ஆகவே, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பாளையங்கால்வாய்க்காக கூடுதலாக நிதி ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com