சுதந்திர தினம்: நெல்லையில் பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினத்தையொட்டி, திருநெல்வேலியில் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி, திருநெல்வேலியில் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
     சுதந்திர தினம் நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஆக. 15) உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசியக்கொடியேற்றி போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பதுடன், விடுதலைப் போராட்ட வீரர்கள், தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்து, பல்வேறு துறைகளிலும் சிறப்பிடம் பெற்றோருக்கு சான்றிதழ்களையும், மாநில, தேசிய போட்டிகளில் வென்ற  மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கிப் பாராட்டுகிறார்.
பாதுகாப்பு அதிகரிப்பு: சுதந்திர தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்திப்பு ரயில் நிலையத்தில் பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில்களில் பார்சல் அனுப்புவதில் கடந்த 3 நாள்களாக பல்வேறு கட்டுப்பாடுகளும், சில பொருள்கள் கொண்டு செல்ல தற்காலிக தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பேருந்து நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதன்கிழமை மாலை முதல்  ஆய்வாளர்கள் தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 சுதந்திர தின விழா நடைபெறவுள்ள வ.உ.சி. விளையாட்டு மைதானம் புதன்கிழமை முதல் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மைதானத்தில் மோப்பநாய் மூலம் சோதனை நடைபெற்றது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரசோதனையில் ஈடுபட்டனர்.
பீடி-சிகரெட்களுக்கு தடை: இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பாளையங்கோட்டை வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் மெட்டல் டிடெக்டர்,  வெடிகுண்டு தடுப்பு போலீஸாரின் சோதனைக்கு பின்பே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.  மைதானத்துக்குள் பீடி, சிகரெட், தீப்பெட்டி உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தேசியக் கொடிகளைக் கொண்டுவர வேண்டாமென மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com