மழை அதிகம்; அணைகளில் நீர்மட்டம் குறைவு

தென்மேற்குப் பருவ மழைக் காலத்தில் ஆக. 1 முதல் 14 வரையுள்ள காலத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு

தென்மேற்குப் பருவ மழைக் காலத்தில் ஆக. 1 முதல் 14 வரையுள்ள காலத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிக மழை பதிவாகியுள்ளது.  ஆனால் அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளது.
2016ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை மற்றும் 2017ஆம் ஆண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்து அணைகளில் நீர்மட்டம் குறைவாகக் காணப்பட்டது. 2017ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் சராசரி அளவில் 80 சதவிகிதம் மழை பெய்ததையடுத்து அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. மேலும் 2018ஆம் ஆண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் சராசரி மழை அளவில் 75 சதவிகிதம் பெய்ததையடுத்து அணைகளில் நீர் இருப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரியை விடக் குறைவாகப் பெய்ததால், அணைகளில் இருந்த நீர் கோடைகால குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டை விட நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அணைகளின் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்த நிலையில் காணப்படுகிறது.
2018 ஆக. 1 முதல் 14 வரையுள்ள காலத்தில் பாபநாசம் அணையின் நீர் மட்டம் 124 அடியாகவும், நீர்இருப்பு 79.29 சதவிகிதமும் இருந்தது.
நிகழாண்டு அதே காலத்தில் 102.30 அடியும்,  நீர்இருப்பு 57.56 சதவிகிதமும் உள்ளது. 
சேர்வலாறு அணையில் 140.88 அடியாக இருந்த நீர்மட்டம், நிகழாண்டு 128.21 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் 71.75 அடியாக இருந்த நீர்மட்டம் நிகழாண்டு 60 அடியாக உள்ளது. 82.50அடியாக இருந்த கடனாநதி அணை நீர்மட்டம் 66 அடியாக உள்ளது. 80 அடியாக இருந்த ராமநதி அணை நீர்மட்டம் 75.25 அடியாக உள்ளது. 70.21 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் 70.21 அடியாக உள்ளது. 36.10 அடியாக இருந்த குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாக உள்ளது. 50 அடியாக இருந்த கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 52.50 அடியாக உள்ளது. 132.22 அடியாக இருந்த அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 119 அடியாக உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக. 1 முதல் 14 வரை அம்பாசமுத்திரம் 70 மி.மீ., ஆய்க்குடி 63.20 மி.மீ., சேரன்மகாதேவி 25 மி.மீ., மணிமுத்தாறு 49.80 மி.மீ., நான்குனேரி 32.70 மி.மீ., பாளையங்கோட்டை 6 மி.மீ., பாபநாசம் 236 மி.மீ., ராதாபுரம் 102.50 மி.மீ., சங்கரன்கோவில் 28 மி.மீ., செங்கோட்டை 234 மி.மீ., சிவகிரி 46 மி.மீ., தென்காசி 152மி.மீ., திருநெல்வேலி 2.50 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 1049 மி.மீ. ஆகும். 2018ஆம் ஆண்டு ஆக. 1 முதல் 14 வரை பெய்திருந்த மழைஅளவு 481 மி.மீ. ஆகும். கடந்த ஆண்டை விட மழை அதிகம் பெய்துள்ள நிலையில், அணைகளில்நீர்மட்டம் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிரம்பி வரும் கருப்பாநதி அணை
கடையநல்லூர் கருப்பாநதி அணை வேகமாக நிரம்பி வருகிறது.  
72 அடி கொள்ளளவுகொண்ட இந்த அணையின் நீர்மட்டம் புதன்கிழமை 70.21 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 26 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து  2 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.  120 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 112.858 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.  அணைப் பகுதியில் 7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com