குடிமராமத்துப் பணிகள்: நிர்வாக ஆணையர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை தமிழக அரசின் வருவாய்த்துறை நிர்வாக ஆணையர்


திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை தமிழக அரசின் வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டை வட்டம், திருவேங்கடநாதபுரத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் திருநெல்வேலி கால்வாய் தூர்வாரி புனரமைத்து மதகுகள் சரி செய்யும் பணிகளையும், சுத்தமல்லி அணைக்கட்டில் ரூ.29.50 லட்சம் மதிப்பில் தலை மதகு மற்றும் மணல் வாரி ஆகியவற்றை மறுசீரமைப்பு செய்யும் பணிகளையும் வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியது: 
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ரூ.3 கோடியே 24 லட்சம் மதிப்பிலும், பொதுப் பணித்துறை மூலம் இம் மாவட்டத்தில் 185 பணிகள் ரூ.49.3 கோடி மதிப்பிலும் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. 
இப் பணிகளை பொதுப் பணித் துறை, நீர்வள ஆதாரத் துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள் (அல்லது) நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் (அல்லது) பாசனதாரர்கள் ஆகியோர் மூலம் செயல்படுத்த வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது.  கால்வாயில் வளர்ந்துள்ள செடி கொடிகள், முள்புதர்களை அகற்றுதல், தூர்வாரி சுத்தம் செய்தல், பழுதடைந்த மடை மற்றும் வெளிப்போக்கி தடுப்புச்சுவர் பழுது பார்த்தல், குளங்களின் கரைகளைப் பலப்படுத்துதல், கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுதல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல் மற்றும் திருகு அடைப்பான்களை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 
 இப்பணிகள் அனைத்தையும் கண்காணிக்க பொறியாளர்களைக் கொண்ட 10 துணை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.  
துணை ஆட்சியர் நிலையிலான மாவட்ட அலுவலர்களும் நியமிக்கபட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின்போது, குடிமராமத்துப் பணிகள் சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களிடம் இல்லாமல், ஒப்பந்ததாரர்களிடம் கொடுக்கப்படுவதால் பணிகள் தரமாக இல்லை.  பெயரளவுக்கே நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.  இதற்கு பதிலளித்த ஆணையர், குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.  இதுதவிர செயலியிலும் குறைகளைப் பதிவேற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  குடிமராமத்துப் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.  அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது,  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி கோட்டாட்சியர் மணிஷ் நாராணவரே, உதவி செயற் பொறியாளர் எஸ்.சுந்தர்சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com