திசையன்விளை சுடலை ஆண்டவர் கோயிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம்

திசையன்விளை, வடக்குத்தெரு, சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழாவில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திசையன்விளை, வடக்குத்தெரு, சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழாவில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இத்திருக்கோயில் கொடை விழா  கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 18) பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து,  5 நாள்கள் நடைபெற்ற விழாவில் பல்வேறு வழிபாடுகள், நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெண்களுக்கு வண்ண கோலப்போட்டி, சமையல் போட்டி, மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், பல்சுவை கலைப்போட்டிகள், கம்யூட்டர் போட்டி, பெண்கள் கலந்துகொண்ட சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை, சமயச் சொற்பொழிவு, இரவில் இன்னிசை கச்சேரி, பரத நாட்டியம் நிகழ்ச்சி, கும்பாபிஷேகம், பால் அபிஷேகம், வில்லிசை, மாக்காப்பு பூஜை, அலங்கார பூஜை, சிறப்புப் பூஜை ஆகியவை நடைபெற்றன.
உச்ச கொடை விழா வெள்ளிக்கிழமை காலையில் தொடர் சிறப்புப் பூஜையுடன் தொடங்கியது. கோயில் வளாகத்தில் கிராமிய கலை நிகழ்ச்சிகளின் இசை சங்கமம் நடைபெற்றது. பின்னர், மன்னராஜா கோயிலிலிருந்து தாரை தப்பட்டை, கொம்பு வாத்தியம், நையாண்டி மேளம், டிரம் செட், செண்டா மேளம் முழங்க முத்துக்குடை ஏந்தி பெண்கள் மற்றும் சிறுமியர் கலந்து கொண்ட மாபெரும் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில், கோயில் வரிதாரர்கள், விழாக் குழுவினர், நகர பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மஞ்சள்பெட்டி ஊர்வலம் கோயிலை அடைந்ததும், சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, மஞ்சள் நீராடல் ஆகியவை நடைபெற்றன. பிற்பகலில் சமயச் சொற்பொழிவு, மகுட ஆட்டம், வில்லிசையும், மாலையில்  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்குதலும் நடைபெற்றன.
பின்னர், கோயில் வளாகத்தில் சிலம்பப் போட்டிகள், இன்னிசை கச்சேரி, சமயச் சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. இரவில் சுவாமிக்கு விசேஷ அலங்கார பூஜையும், சாமப் படைப்பு பூஜையும் நடைபெற்றன. கிராமிய கலைகளான கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், பொம்மலாட்டம் ஆகியவை பல்வேறு பகுதிகளில் விடிய விடிய நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் கொடை விழாவை கண்டுகளித்தனர்.  ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com