பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: நெல்லையில் பலத்த பாதுகாப்பு; தீவிர சோதனை

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, திருநெல்வேலி சந்திப்பில்

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, திருநெல்வேலி சந்திப்பில் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 
இலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 
திருநெல்வேலி நகரத்தைப் பொருத்தவரையில் சந்திப்பு ரயில் நிலையம், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள், பண்டல்கள், சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். மேலும், போலீஸ் மோப்ப நாய் உதவியுடனும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவீண்குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகரில் மாநகர காவல் ஆணையர்  தீபக் எம்.டாமோர் தலைமையில், துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் மேற்பார்வையில் போலீஸார்  வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக  காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் கூறியதாவது: தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு முதலே தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகரில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்குரிய நபர்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 
சந்திப்பு ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநகர எல்லைக்குள் இருக்கும் ரயில் இருப்புப் பாதை பகுதியில் சந்தேகத்திற்குரிய பொருள் ஏதும் உள்ளதா? சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரும் சுற்றித் திரிகிறார்களா என்பதைக் கண்டறிய ரயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து மாநகர போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மாநகரில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com