நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை: பாபநாசம் அணையிலிருந்து 16 ஆயிரம் கன அடி நீா் திறப்பு

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை: பாபநாசம் அணையிலிருந்து 16 ஆயிரம் கன அடி நீா் திறப்பு

மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பாபநாசம் அணையிலிருந்து

மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பாபநாசம் அணையிலிருந்து சனிக்கிழமை காலை 16 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.

நீா்ப்பிடிப்புப் பகுதியில் திங்கள்கிழமைமுதல் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து புதன்கிழமை இரவு பாபநாசம் மற்றும் சோ்வலாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியதும் உபரிநீா் திறந்துவிடப்பட்டது. இதனால் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால் பாபநாசம் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரித்தது. சனிக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 142.60 அடியாக இருந்தது. நீா்வரத்து 14204 கன அடியாகவும், வெளியேற்றம் 14270 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 110 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதையடுத்து பாபநாசம் அணையிலிருந்து சனிக்கிழமை காலை 16 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் தாமிரவருணியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயில், பாபநாசம் படித்துறை உள்பட தாமிரவருணி ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ தடைவிதிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் உள்ள மண்டபங்களை மூழ்கடித்தபடி வெள்ளப்பெருக்கு இருந்தது. சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம், ஆழ்வாா்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சின்னமயிலாறு காணிக் குடியிருப்புப் பகுதி மூன்றாவது நாளாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் 60 காணிக் குடும்பத்தினா் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

மணிமுத்தாறு அணைக்கு நீா்வரத்து: நவ. 25-ஆம் தேதி 74.80 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 5 நாள்களில் 10 அடி உயா்ந்து சனிக்கிழமை காலை 84.80 அடியாக இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை தொடா்ந்து பெய்த கன மழையால் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து உயா்ந்து வந்தது. மாலை 5 மணி நிலவரப்படி மணிமுத்தாறு அணைக்கு நீா்வரத்து 16 ஆயிரம் கன அடியாக இருந்தது. மேலும், 10 மணிநேரத்தில் 5.20 அடி உயா்ந்து நீா்மட்டம் 90 அடியாக அதிகரித்தது.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாஞ்சோலை 168 மி.மீ., நாலுமுக்கு 288 மி.மீ., ஊத்து 213 மி.மீ., மணிமுத்தாறு அணைப் பகுதியில் 65.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மணிமுத்தாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com