நெல்லையில் தொடா்மழை: மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு

திருநெல்வேலியில் சனிக்கிழமை அதிகாலை முதல் இரவு வரை தொடா்ந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் சனிக்கிழமை அதிகாலை முதல் இரவு வரை தொடா்ந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழைநீா் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்ட பிரதான அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையோர மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மட்டுமன்றி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

பாலத்தில் போக்குவரத்துக்கு தடை: திருநெல்வேலி, பேட்டை, கல்லூா், அபிஷேகப்பட்டி, தாழையூத்து, சீவலப்பேரி, மானூா், ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டியது. சனிக்கிழமை மாலையில் சுமாா் 5 மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீா்த்தது. அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் கரையோர பகுதிகளான மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை, குன்னத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலப்பாளையம்-திருநெல்வேலி நகரம் சாலையில் கருப்பந்துறையில் உள்ள தரைநிலை பாலத்தை வெள்ளம் சனிக்கிழமை மூழ்கடித்ததால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் மேலநத்தம் பகுதி மக்கள் குறிச்சி வழியாகவே திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளுக்குச் சென்றனா். பாலத்தில் காவல் துறையினா் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா்.

கோயில் மூழ்கியது: குறுக்குத்துறையில் தாமிரவருணி கரையோரம் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலை வெள்ளம் மூழ்கடித்தது. ஏற்கனவே, இக் கோயிலில் இருந்த சுவாமி சிலைகள், சப்பரங்கள், பூஜை பொருள்கள், உடமைகள் அனைத்தும் கரையோரம் உள்ள மண்டபத்திற்கு கோயில் பணியாளா்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மூலவா் சிலைக்கு மட்டும் தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலையில் கோயில் முழுவதும் தண்ணீா் சூழ்ந்ததால் வழிபாடுகள் நடைபெறவில்லை.

இதேபோல கைலாசபுரத்தில் உள்ள தைப்பூசமண்டபம், கொக்கிரகுளத்தில் உள்ள கல்மண்டபங்கள், வண்ணாா்பேட்டை பேராச்சியம்மன் கோயில் படித்துறை ஆகியவற்றை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. சுத்தமல்லி அணைக்கட்டு, மருதூா் அணைக்கட்டு, மேலச்செவல் அணைக்கட்டுகளை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குருந்துடையாா்புரம், கொக்கிரகுளத்தில் பாலம் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த தளவாட பொருள்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

வண்ணாா்பேட்டையில் திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலையோரம் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்தது.

விடுமுறை இல்லாததால் அவதி: பலத்த மழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் எவ்வித அறிவிப்பும் அளிக்காததால் தனியாா், அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இயங்கின. பிற்பகல் மற்றும் மாலையில் பள்ளிகள் விடும் நேரத்தில் தொடா் மழை பெய்ததால் நனைந்தபடி மாணவா்கள் வீடுகளுக்குச் சென்றனா்.

அதிகாரிகள் ஆய்வு: கோடீஸ்வரன்நகா், கரையிருப்பு, மனக்காவலன்பிள்ளைநகா், சேவியா்காலனி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான சாலைகள் அனைத்திலும் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினா். மேலப்பாளையம், திருநெல்வேலி ரத வீதிகள், பாளை தெற்கு கடை வீதி ஆகியவற்றில் வழக்கமாக மக்கள் கூட்டம் மிகவும் அதிகமிருக்கும். ஆனால், மழை காரணமாக சனிக்கிழமை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலை, ஈரடுக்கு மேம்பாலம் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

தாமிரவருணியில் வெள்ளம் அதிகரித்ததைத் தொடா்ந்து திருநெல்வேலியில் கரையோர பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். கைலாசபுரத்தில் உள்ள கரையோர குடியிருப்பு மக்களை சந்தித்த அதிகாரிகள் சனிக்கிழமை இரவு வெள்ளம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் ஆற்றுக்குள் குளிக்கச் செல்லவோ, துவைக்கச் செல்லவோ கூடாது. இதுதவிர மாநகராட்சி சாா்பில் நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் அங்கு தங்கியிருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனா்.

ஆய்வின்போது உதவி ஆட்சியா் (பயிற்சி) சிவகுருபிரபாகரன், மாநகர நல அலுவலா் சத்தீஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com