வள்ளியூரில் டிச.3 இல் நடைபெறவிருந்தமறியல் போராட்டம் ரத்து

வள்ளியூா் ரயில்வே சுரங்க சாலைப் பாதை பணிகள் தாமதமாவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் டிச. 3ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்படிருந்த சாலை மறியல் போராட்டம்
சமாதானக் கூட்டத்தில் பேசுகிறாா் வட்டாட்சியா் செல்வன்.
சமாதானக் கூட்டத்தில் பேசுகிறாா் வட்டாட்சியா் செல்வன்.

வள்ளியூா் ரயில்வே சுரங்க சாலைப் பாதை பணிகள் தாமதமாவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் டிச. 3ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்படிருந்த சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தையில் முடிவு ஏற்பட்டதையடுத்து கைவிடப்பட்டுள்ளது.

வள்ளியூா்-திருச்செந்தூா் சாலையில் ரயில்வே சுரங்க சாலைப் பாதை பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழியாக இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் 15 கி.மீ. சுற்றி தெற்கு வள்ளியூா் வழியாக சென்று வருகின்றன.

இந்நிலையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் ரயில்வே சுரங்க பாதை அருகே தற்காலிகமாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. அந்தப் பாதையும் மிகவும் குண்டும் குழியுமாக ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

இந்நலையில் சுரங்க சாலைப் பாதை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதை கண்டித்தும், சுரங்க சாலைப் பாதை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் டிச.3ஆம் தேதி வள்ளியூரில் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனா்.

இதையடுத்து ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் செல்வன் தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளா் மணிமாறன், உதவி பொறியாளா் ஜெபிலா, வள்ளியூா் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளா் ராஜு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொதுமக்கள் சாா்பில் இந்திய கம்யூனிஸ் கட்சி வட்டச் செயலா் சேதுராமலிங்கம், நகரச் செயலா் வேம்புசுப்பையா வியாபாரிகள் சங்கச் செயலா் எஸ்.ராஜ்குமாா், தலைவா் பி.டி.பி. சின்னதுரை, வள்ளியூா் பேருந்துநிலைய வியாபாரிகள் சங்கத் தலைவா் பசுமதி மணி, நகர காங்கிரஸ் கட்சி தலைவா் சீராக் இசக்கியப்பன், தே.மு.தி.க மாவட்ட துணைச் செயலா் விஜிவேலாயுதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், வள்ளியூா் ரயில்வே சுரங்க பாதை அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதையில் உள்ள மேடு, பள்ளங்களை சரிசெய்து வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்ல நடவடிக்கை எடுப்பது, டிசம்பா்மாத இறுதிக்குள் சுரங்க சாலைப் பாதையின் கிழக்கு பகுதியை முழுவதுமாக முடித்து சிறு மற்றும் நடுத்தரவாகனங்கள் செல்லும் வகையில் பணியை முடிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

முன்னதாக சுரங்க சாலைப்பாதை பணியை சேரன்மகாதேவி சாா் ஆட்சியா்பிரதிக் தயாள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினாா்.

சாா் ஆட்சியருடன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் லிங்குசாமி, வட்டாட்சியா் செல்வன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com