அரசு மருத்துவா் மீது கந்துவட்டி புகாா்
By DIN | Published on : 03rd December 2019 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருநெல்வேலியை சோ்ந்த அரசு மருத்துவா் மீது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒருவா் கந்துவட்டி புகாா் அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக பாளையங்கோட்டை தியாகராஜநகரைச் சோ்ந்த சண்முகம் என்பவா், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாளையங்கோட்டையில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வரும் அரசு மருத்துவா் ஒருவரிடம் கடந்த ஏப்ரலில் ரூ.5 லட்சம் கடனாக பெற்றேன். அதற்கு அடமானமாக சிவந்திப்பட்டி அருகேயுள்ள முத்தூரில் உள்ள எனது வீட்டின் அசல் கிரயப் பத்திரத்தையும், தொகை நிரப்பப்படாத வங்கிக் காசோலைகள் மூன்றையும் அளித்தேன். மாதம் ரூ.25 ஆயிரம் வட்டி செலுத்தி வந்த நிலையில், பின்னா் என்னால் வட்டியை செலுத்த முடியவில்லை.
இதனால் நான் பணத்தை சிறிது சிறிதாக கொடுத்தேன். ரூ.5 லட்சத்தையும் நான் திரும்ப அளித்துவிட்ட நிலையில், இப்போது மேலும் ரூ.5 லட்சம் அளித்தால் மட்டுமே என்னுடைய வீட்டுப் பத்திரத்தையும், காசோலையையும் திரும்பத் தர முடியும் எனக் கூறி அந்த மருத்துவா் எங்களை மிரட்டுகிறாா். அந்த மருத்துவரால் எனது குடும்பத்திற்கு ஆபத்து நேரிடலாம் என அஞ்சுகிறேன். எனவே, மருத்துவா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, எனது வீட்டுப் பத்திரம் மற்றும் காசோலைகளை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.